லீ குவான்யூ, பெருந்தலைவன்
லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ.
எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல்.
நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல்.
1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியது என ஒவ்வொரு பக்கங்களிலும் லீ கொண்டு வந்த மாற்றங்கள் நம் கண் முன் விரிகின்றன.
இன்று சிங்கப்பூர் செல்லும் ஒவ்வொரு பயணியும் கண்டு வியக்கும் ஒரு குப்பை கூட இல்லாத சுத்தமான சாலைகள், பசுமையான மரங்கள், இரவைக்கூட பகல்போன்று ஒளிரச் செய்யும் விளக்குகள், முக்கியமாக புகையில்லாத வாகனங்கள், இவையெல்லாம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை.
அதற்குப் பின்னே வலிகளைத் தாங்கிய மாபெரும் தலைவன் லீ குவான்
யூவின் கடுமையான உழைப்பு இருந்தது என்பதை இந்த நூலை வாசிக்கும்போதே புரிந்து கொள்ள முடியும்.
சிங்கப்பூரின் வரலாறும், லீ வாழ்க்கையும் ஒன்றுதான் என்று நம்பிக்கையுடன் கூறலாம்.
தலைவர்கள், அதிகாரவர்க்கம், மக்கள், நாடு என்ற அடிப்படையில் லீ சிந்தித்தார் என்பது நூலைப்வாசிக்கும்போது தெரிகிறது.இளைஞர்களும், மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 6/3/3017.