எம்.ஜி.ஆர். கதை
எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், பக். 352, விலை 200ரூ.
பத்திரிகை துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், 1987ல் ‘தேவி’ வார இதழில் ‘எம்.ஜி.ஆர். கதை’ என்று ஒரு வருடத்திற்கு மேல் எழுதிய தொடர், வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
சினிமா, அரசியல் போன்ற துறைகளிலும் இதன் தாக்கம் இருந்ததால், பிறகு ‘ராணி’ வார இதழிலும் வேறு பல செய்திகளுடன் இதே தலைப்பில் 70 வாரங்கள் இத்தொடர் வெளியாகி சாதனை படைத்தது. எம்.ஜி.ஆரைப் பற்றிய நிறைகளை மட்டுமின்றி, குறைகளாகக் கூறப்பட்ட கருத்துக்களும் இத்தொடரில் இடம் பெற்றதே இதற்குக் காரணம்.
இதில் எம்.ஜி.ஆரின் இளமைப் பருவம், நாடக அனுபவம், சினிமா அனுபவம், அரசியல் அனுபவம்… என்று எம்.ஜி.ஆர். குறித்த ஒவ்வொரு விஷயங்களும் படிப்பவர்களை கவரச் செய்யும். உலகிலேயே முதல் முதலாக சினிமா மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி, ஆட்சியைப் பிடித்து, இறுதிவரை ஆட்சியையும், புகழையும் தக்க வைத்து சாதனைப் படைத்த எம்.ஜி.ஆர்., இதற்காக எத்தனை முயன்றிருக்கிறார் என்பது இன்றைய தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துக் கூடியவை.
எம்.ஜி.ஆர். பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்தாலும், இந்நூலாசிரியரின் எம்.ஜி.ஆர். கதை’ ஏதோ ஒரு வகையில் மனதைத் தொடுவதை உணர முடிகிறது. இந்நூலுக்கு வாழ்த்துரை எழுதியுள்ள நடிகர் சிவகுமார்கூட. எம்.ஜி.ஆர். குறித்த அற்புதமான ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டுள்ளதே. இந்நூலைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. தவிர, ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏற்ப தொகுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் அதற்கு வழிகோலுகிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 3/8/2016.