எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்
எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி.சம்பத், கவிதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120.
எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் எத்தனையோ சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் என்பதை இந்த நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது.
எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்கும்போது அழுது நடிக்க மாட்டார். முகத்தை மூடிக்கொள்வார். சிலபேர் இதைப்பார்த்து, அவருக்கு உணர்ச்சிகரமாக நடிக்கத் தெரியாது என்பார்கள். உண்மை அதுவல்ல. அவர் தன் ரசிகர்களிடையே ஓர் அழகனாகவும், வீரனாகவும் வெளிப்பட விரும்பினார். வீரன் அழுதால் மக்களுக்கு அவன் வலிமையில் நம்பிக்கை போய்விடும். அழகன் அழுதால் முகம் அழகற்றதாகத் தோன்றும். இந்த இரு காரணங்களுக்காக, அவர் அழுகிற மாதிரி காட்சிகளில் முகத்தைக் கைகளால் மூடிக் கொள்வார்.
“சர்வாதிகாரி’’ படத்தில் நடித்தபோது, ஏராளமான போர்வீரர்களுக்கு மேக்கப் போட நேரம் ஆகி, படப்பிடிப்பு தாமதமாவதைக் கவனித்த எம்.ஜி.ஆர். வீரர்களுக்கு மேக்கப் போடும் வேலையைத் தாமும் செய்தார். இப்படி ஏராளமான சம்பவங்கள்.
சினிமா, அரசியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு வரலாற்று நூல்.
நன்றி: தினமணி, 30/7/2016.