இந்த நதி நனைவதற்கல்ல
இந்த நதி நனைவதற்கல்ல, தமயந்தி, பிரக்ஞை வெளியீடு, பக்.164, விலை ரூ. 130.
ஒரு பெண், தன் வாழ்க்கையில் தொடர்புடைய பெண்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, சமூகப் பார்வையோடு ஆராய்வதே “இந்த நதி நனைவதற்கல்ல‘’. சட்டங்களாலும், நீதிமன்றங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத பெண்களின் மீதான வன்முறை குறித்து பேசும் நூலாசிரியர், தனது ஒவ்வொரு கட்டுரையிலும் தான் படித்த, சந்தித்த பெண்களின் பிரச்னைகளைத் தன் உக்கிரமான சொல்லாடலால் உணர வைக்கிறார். வாசகரின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.
மறக்கப்பட்ட வழக்குகள், சமூக அதிகாரக் கட்டமைப்புகள், குடும்பம் முதல் பொது அரங்கு வரை பெண்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்னைகளைக் கூறும் இந்நூல், ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. இரண்டாம் பகுதியில் நீதி மறுக்கப்பட்ட பெண்களின் வழக்குகளும், சினிமா நாயகிகளின் கதாபாத்திர வடிவமைப்பும், ஆண்- பெண் உறவு நிலைக்குழப்பங்கள் குறித்தும் விவாதிக்கும் ஆசிரியர், இதற்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைச் சிந்திக்க வைக்கிறார். யாரும் கையிலெடுக்கத் தயங்கும் பிரச்னைகளைத் துணிந்து விவாதிப்பதன் மூலம், ஒவ்வொரு வாசகனின் மனதிலும் பெண்ணியச் சார்பு சிந்தனைகளைச் செதுக்குகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 30/7/2016.