மாப்ளா புரட்சி
மாப்ளா புரட்சி – மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள், ஜெகாதா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180.
நிலச்சுவான்தார்களிடமிருந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க மலபார் மாப்ளா சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசு இருந்ததால் மாப்ளா சமூகத்தினர் காலனியாதிக்கத்தையும் எதிர்த்தனர். ஆனால் இந்துக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே “மாப்ளா புரட்சி’ என்று பல்வேறு தரப்பினர் பதிவு செய்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும்விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மலபாரின் ஜென்மி சமூகத்துக்கு வரைமுறையற்ற நில உடைமை அதிகாரங்களை வழங்கியதை எதிர்த்து மாப்ளா குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். 1836 முதல் 1919 வரை நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் காலனி ஆதிக்கத்துக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. அவை பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டன.
கிளர்ச்சியின் தொடக்க கட்டத்துக்குப் பிறகு நடந்த கொலைகள், விவசாயம் சார்ந்த பகையுணர்வின் காரணமாக நிகழ்ந்ததேயன்றி, மத துவேசத்தால் அல்ல. நிலச்சுவான்தார்களிடமிருந்த நில உடைமை ஆவணங்கள், கடன் பத்திரங்கள், பொய்ப் பற்றுச்சீட்டு ஆகியவற்றை கிளர்ச்சியின்போது மாப்ளாக்கள்அழித்தனர். இக்கிளர்ச்சியானது நகர்ப்புற பிரச்னைகளை மையமாக வைத்து நிகழவில்லை. கிளர்ச்சியின்போது கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் கிலாஃபத் சொத்துகள் என்றும் அதை உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் குஞ்ஞாமது ஹாஜி உள்ளிட்ட ஒன்பது தலைவர்கள் உத்தரவிட்டனர் என்பன போன்ற தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.
கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மாப்ளாக்களை மேலும் கொதிப்படையச் செய்தன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
மாப்ளா புரட்சியை கேரள – அரேபிய வணிகம், நிலப்பிரபுத்துவம், காலனியாதிக்கம், இந்திய சுதந்திரப் போராட்டம், முதலாம் உலகப் போர் உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணியுடன் விளக்குகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 7/3/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000032944_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818