மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு
மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு, ப. சோழநாடன், நிழல் வெளியீடு, விலை 150ரூ.
இங்கிலீஷ் மெட்டில் மாரியப்ப சுவாமிகள்!
தமிழிசை என்று வருகிறபோது என்ன காரணத்தாலோ பல அருமையான சாஹித்ய கர்த்தாக்களைப் பிரபலமானவர்கள் கண்டுகொள்வதே இல்லை. மதுரை சோமுவின் வெண்கல நாதத்தில் இழைந்து காற்றை கௌரவப்படுத்திய பல பாடல்கள் மதுரை மாரியப்ப சுவாமிகள் இயற்றியவை என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?
‘செந்திலாண்டவன் கீர்த்தனைகள்’ என்று ஒரு பாடல் தொகுப்பை 1926ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார் தீவிர முருக பக்தரான மதுரை மாரியப்ப சுவாமிகள். ‘தமிழிசை இயக்கம் தோன்றாத காலத்திலேயே அது என்ன காரணத்துக்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ அதற்காக முழு மூச்சுடன் பாடுபட்டவர் மாரியப்ப சுவாமிகள்’ என்று எழுதுகிறார், இந்த வரலாற்று நூலை அழகுற எழுதி வெளியிட்டிருக்கும் ப.சோழநாடன்.
இந்த நூலின் பின்னிணைப்பாக அவர் எழுதிய 99 பாடல்களையும் தொகுத்துத் தந்திருப்பது நல்ல பணி. இந்த நூலில் கர்நாடக சங்கீதத்தில் ‘இங்கிலீஷ் நோட்டு’ இடம் பிடித்த கதையைப் பற்றியும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு, அவர்கள் பயன்படுத்திய பேண்ட் வாத்தியம் முதலான கருவிகளைத் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்களாம்.
தஞ்சையில் பெரும் இசைக்கலைஞர்களாக விளங்கிய நாகசுரக்காரர்கள் வெகு சீக்கிரத்தில் இந்த இங்கிலீஷ் மெட்டைக் கைக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களிடமிருந்து முத்துசாமி தீட்சிதர் தமது கீர்த்தனைகளில் ஒன்றுக்கு அதைப் பயன்படுத்தினார். அப்படியே மேடை நாடகங்களில் சங்கரதாஸ் சுவாமிகள் பயன்படுத்தியிருக்கிறார்.
அவரைப் பின்பற்றி மாரியப்ப சுவாமிகளும் ‘அரனார் திருமகனே’ என்ற பாடலை இங்கிலீஷ் நோட்டில் எழுதினாம். இப்படி ஏராளமான தகவல்களைக் கொண்ட நல்ல நூல் இது.
-சுப்ர. பாலன்.
நன்றி: கல்கி, 7/2/2016.