மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்

மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும் – முதல் ஒப்புமை நூல் – வி.ச.வாசுதேவன், அமிர்தவல்லி பிரசுரம், பக்.144, விலை ரூ.100.

மகாகவி பாரதியாரையும், கணிதமேதை இராமானுஜத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நூல். 1882 இல் பாரதியார் பிறந்தார். 1887 இல் இராமானுஜன் பிறந்தார்.

சமகாலத்தவர்களான அவர்களின் இளமைக் காலம் தொடங்கி இறுதி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை கால வரிசைப் படி இந்நூல் தொகுத்து வழங்குகிறது.

சிறுவயதில் பாரதியார் தேய மீதெவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தியியற்கை இல்லாதவராக (பிறர் சொல்வதை
அப்படியே நம்பாதவராக ) இருந்திருக்கிறார். அதேபோன்று இராமானுஜனும் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், கேள்விகளால் ஆசிரியர்களைத் திணறடித்திருக்கிறார்.

பத்துவயது சிறுவனாக பாரதியார் இருந்த காலத்தில் வீதியாட்டங்கள் ஏதிலும் கூட முடியாதவராக இருந்தார். அதே வயதில் இராமானுஜனும் படிப்பில் சிறந்தவராக இருந்தார். சிறுவர்களுடன் விளையாட அவர் அனுமதிக்கப்பட வில்லை.

கணிதமேதை இராமானுஜன் ஆராய்ச்சி செய்ய பல்வேறு உதவிகளை இராமச்சந்திரராவ் என்பவர் செய்திருக்கிறார். அதேபோன்று பாரதியாருக்கு சுதேசமித்திரன்ஆசிரியர் ஏ.ரங்கசாமி அய்யங்கார் உதவி செய்திருக்கிறார். இவ்வாறு பாரதியார், இராமானுஜன் ஆகிய இருவரின் வாழ்க்கைச் சம்பவங்களை நூலாசிரியர் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

இராமானுஜன் மறைந்தபோது அவர் கடல் கடந்து சென்று ஆச்சாரத்தை மீறிவிட்டார் என்பதால் இறுதிச் சடங்கு செய்ய யாரும் முன் வரவில்லை. இராமச்சந்திர
ராவ் செய்த முயற்சியால் ஒரு புரோகிதர் மட்டும் ஒப்புக்கொள்ள, இராமானுஜனின் இறுதி ஊர்வலத்தில் சிலரே கலந்து கொண்டனர். அதுபோலவே பாரதியாரின் இறுதி ஊர்வலத்திலும் சிலரே கலந்து கொண்டனர். இப்படி மனதை உருக்கும் ஒப்பீடுகளும் உள்ளன. வித்தியாசமான நூல்.

நன்றி: தினமணி, 19/3/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *