மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்
மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல், க.பழனித்துரை, தமிழ்நாடு சர்வோதய மண்டல், பக்.112, விலை ரூ.50.
மக்களாட்சியில் மன்னராகக் கருதப்பட வேண்டிய மக்கள், வாக்குக்குப் பணம் பெறுபவராகவும், குறைகளைத் தீர்க்க மனு போடுபவராகவும் ஆகிவிட்டனர். அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. இந்தச் சூழலில் ஆட்சி, ஆளுகை, நிர்வாகம், மக்கள் நலன் இவை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நூலாசிரியர் அவ்வாறு சிந்தித்து எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் கட்சிகளின் செயல்பாடு, ஆளுமைப் பண்பு, நிர்வாகத் திறன் போன்றவை விரிவாகப் பேசப்பட்டாலும், எல்லாக் கட்டுரைகளுக்கும் அடிநாதமாக மக்கள் நலன் என்பதே அமைந்துள்ளது.
குறிப்பாக, ‘ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியோ, கட்டமைப்பு வளர்ச்சியோ அல்ல. மாறாக அந்நாட்டு மக்கள் மானுடம் போற்றும்படி மரியாதையுடன் வாழ வழி செய்வதே‘ என்றும் ("மக்கள் அரசியலைக் கட்டமைக்க'), "இன்றைய அரசியலில் மக்களின் எதிர்காலம் குறித்தோ, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது குறித்தோ, நீர் பற்றாக்குறை குறித்தோ, நலிந்துவரும் சட்டம் – ஒழுங்கு குறித்தோ விவாதிக்கப்படுவதில்லை.
இவற்றையெல்லாம் வல்லுநர்களிடம் விட்டுவிட்டு பதவியைப் பிடிப்பது, அதைத் தக்க வைத்து அதன் மூலம் பணம் ஈட்டுவது, அந்தப் பணத்தின் மூலம் மீண்டும் பதவியைப் பிடிப்பது – இவையே அரசியல்வாதிகளின் கவலையாக இருக்கிறது‘ இன்றைய அரசியலின் தேக்கநிலை) என்று குறிப்பிட்டிருப்பதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.
அரசியல் தொடர்புடையோர் மட்டுமின்றி நடுநிலை சிந்தனையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 9/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818