மனித வாழ்வில் ஆவணங்கள்
மனித வாழ்வில் ஆவணங்கள், வழக்கறிஞர் தரும் விளக்கங்கள், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன படைப்பகம், பக்.176, விலை ரூ.200.
சொத்துகளை விற்பது, வாங்குவது, சொத்துகளைப் பிறருக்கு எழுதி வைப்பது, சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்து கொள்வது, சொத்தை விற்பதற்கு பிறருக்கு உரிமை கொடுப்பது, சொத்தை அடமானம் வைப்பது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, கடன் வாங்குவது என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நிகழத்தான் செய்கிறது. அந்த நிகழ்வுகளின்போது நாம் ஏமாறாமல் இருக்க, அது பற்றிய சட்டரீதியான தெளிவு நமக்கு மிகவும் அவசியம்.
உதாரணமாக, சொத்தை விற்கும்போது விற்பனை ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்யும்போது கட்டுமான ஆவணம் தேவை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போது கடன் உறுதிச் சீட்டு அவசியம்.
இந்நூல் அதிகார ஆவணம், கிரைய ஒப்பந்த பத்திரம், விற்பனை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், பாகபாத்தியதை ஆவணம், தானப் பத்திரம், அடமான கடன் பத்திரம், வாடகை ஆவணம், குத்தகை ஆவணம், பரிவர்த்தனை ஆவணம், உயில் உள்ளிட்ட பல ஆவணங்களை எவ்வாறு எழுத வேண்டும்? அதில் என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்க வேண்டும்? எவற்றில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்பன போன்ற பல தகவல்களை அளிக்கிறது.
இந்த ஆவணங்கள் எல்லாவற்றின் மாதிரிப் படிவங்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பல சட்ட நுணுக்கங்கள் மிக எளிமையாகக் கூறப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 5/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818