மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும், சிவராம காரந்த், தமிழில்; தி.ப.சித்தலிங்கையா, சாகித்திய அகாதெமி, பக்.648, விலை ரூ.485.

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரின் சிறந்த படைப்பு. ஒரு கடலோர வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. நிலத்தை விட்டு தொழில் செய்ய நகரத்துக்கு இடம் பெயர்தல் நிகழ்கிறது.

ஆங்கிலக் கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. இத்தகைய நெருக்கடியில் அந்தக் குடும்பப்பெண்கள் முன்னேறவும், நிலை நிற்கவும் போராடுகிறார்கள்.

பார்வதி, சரசுவதி, நாகவேணி என்ற மூன்று பெண்களும் தங்களது ஒவ்வொரு சொல்லிலும் அசைவிலும் வலிமை, பொறுமை, மென்மையைப் பிரதிபலிக்கின்றனர். குடும்ப மூத்தவரான இராம ஐதாளர் கருமி, பகட்டை விரும்புபவர்.

மனித மனத்தின் ஆழத்தை ஊடுருவுதல், எல்லாவற்றையும் விட்டு விலகி இருந்து நோக்குதல், இந்த நாவலின் தனிச்சிறப்பு. நகர வாழ்க்கைக்கு எதிராக கிராமத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பிரசாரம் அல்ல இந்தப் படைப்பு. கடற்கரை மணல் உப்பங்கழி, அலைகளின் ஏற்றம் இறக்கம், வாழத் துடிக்கும் மனிதனின் தளராத போராட்டம் கதையில் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இயற்கை ஓர் உயிர்ப்பொருளாக கதைப் பாத்திரமாக நாவலில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. மண்ணும், மலையும், கடலும் நாவலில் தங்களுக்குரிய மணத்தோடும் இயற்கை வண்ணங்களோடும் வாசகர்களைப் பரவசப்படுத்துகின்றன. மூல நாவலின் சுவை சற்றும் குறையாத மொழி பெயர்ப்பு கச்சிதம்.

நன்றி: தினமணி, 17/9/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *