மறையாத வானவில் மகாகவி பாரதி
மறையாத வானவில் மகாகவி பாரதி, ஆசுகவி ஆராவமுதன், திராவிடமணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.
பாரதியாரின் படைப்புகளில் ஆழ்ந்து தோய்ந்தவர் நூலாசிரியர் என்பதை இம்மரபுக் கவிதை நூல் விளக்குகிறது. பாரதியாரின் சில கவிதைகளையும், சில உரைநடை நூல்களையும் எடுத்துக்கொண்டு அதை மரபு வழுவாமல் மரபுக் கவிதைகளாகப் புனைந்துள்ளார்.
“அரிய உதயம் அவசர அஸ்தமனம்‘’ எனும் தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்து நான்கு எண்சீர் விருத்தப் பாக்களில் பாடியுள்ளார். பாரதியார் கடலூர் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததை சில உவமைகளைக் கொண்டு எடுத்துக்காட்டியுள்ளார். பாரதியின் தேசிய கீதங்களை விடிவிளக்காகவும், சுதந்திரப் போராட்டக் காலத்தின் நாட்குறிப்பாகவும், ஆவணங்களாகவும் பாடியுள்ளார்.
பாரதிப் படைப்புகளுக்குப் பெருமை சேர்க்கும் முப்பெரும் படைப்புகளான பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகியவற்றில் உள்ள கருத்துகளைத் தம் கவிதை நடையில் யாத்துள்ளார்.
இக்கவிதை நூலில், அரிய உதயம் அவசர அஸ்தமனம், அழகிய 66, தேசிய கீதங்கள், வெள்ளை வட்டத்தில் கருப்புப் புள்ளி, பாரதியின் கட்டுரைக் களஞ்சியம், பாரதியின் கவிதை வில், பாரதியின் பக்தி, உலகக் கவியென உயிலெழுதுகின்றார், பாரதி வணக்கம் முதலிய 16 தலைப்புகளில் 314 மரபுக் கவிதைகள் பாரதிக்கு மணிமகுடமாகச் சூட்டப்பட்டுள்ளன.
“காற்றுக்கு வயதேது‘’ என்று பாடி, தமிழ் உள்ளவரை பாரதியாரின் பாடல்கள் நிலைத்திருக்கும் என்று சொல்லியிருப்பது நெஞ்சை நெகிழ்விக்கிறது.
நன்றி: தினமணி, 21/11/2016.