மருத்துவப் பூங்கா
மருத்துவப் பூங்கா, டாக்டர் கமலி ஸ்ரீபால், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ.
மாலைமலர் நாளிதழில் டாக்டர் கமலி ஸ்ரீபால் எழுதிய மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அடிப்படை தேவையாகும். அதைப்போலவே ஆரோக்கியமும் அவசியத் தேவை.
அதன் அடிப்படையில் நமது நலவாழ்வுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளையும் இந்த நூலில் டாக்டர் ஸ்ரீபால் அனைவருக்கும் புரியும்படி எளிய முறையில் எடுத்துக் கூறுகிறார்.
இருதயத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள், தலைவலி, வாய்புண், நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தவிர்க்கும் வழிமுறைகள், சிறுநீரகக் கல், கால் கை முதுகு வலி வராமல் தடுக்கும் முறைகளை அழகுறச் சொல்கிறார்.
குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், எப்படி வளர்ச்சியையும், வலியையும் உணர்கிறாள் என்பதையும், அவள் எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்பதையும் விரிவாக உரைக்கிறார்.
‘மனித இருதயம் ஒருநாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது’ ‘நமது நுரையீரல் சுமார் 10 ஆயிரம் லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறது’ என்பன போன்ற அறிவியல் பூர்வமான அரிய செய்திகளை நமக்கு அறியத் தருகிறார்.
மொத்தத்தில், நோயில்லாமல் சிறப்பாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல்.
நன்றி: தினத்தந்தி, 3/5/2017.