மதராஸாபட்டினம்
மதராஸாபட்டினம், தாழை மதியவன், இலக்கியச் சோலை, பக். 176, விலை 100ரூ.
மதரஸாபட்டினம், சென்னப்பட்டினம், மதராஸ், மெட்ராஸ், (இன்று) சென்னை என அழைக்கப்படும் இப்பட்டணத்தின் வரலாறு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. சென்னக் குப்பத்தை விலைக்கு வாங்கிய 1639-ஆம் ஆண்டைக் கணக்கிட்டு சென்னை-375, 376 என விழா நடத்துகிறார்கள். ஆங்கிலேயர்களின் சென்னப் பட்டினத்திற்குத்தான் வயது 376.
நமது மதராஸப்பட்டினத்திற்கான வரலாறு ஆயிரம் ஆண்டுகள். இந்நூல் ஆங்கில ஏகாதிபத்தியம் அகலும் வரையுள்ள பல நூற்றாண்டு நிகழ்வுகளைக் கூறுகிறது. இன்றைய புனித செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் அதன் எதிரிலுள்ள கடற்கரைப் பகுதிகளும் அன்றைய ஆங்கிலேயர்களின் வணிகப் பிரதேசமாக இருந்துள்ளது. சாந்தோம் கடற்கரையில் போர்த்துக்கீசியர்கள் இருந்துள்ளனர். அவர்களை விரட்டிவிட்டு 1672-இல் பிரெஞ்சுக்காரர்கள் துறைமுகத்தையும் வணிகச் சந்தையையும் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
சாந்தோம் வணிகர் காசி வீரண்ணா என்பவர் ஹசன் கானாக மாறிய கதை சுவையாகக் கூறப்பட்டுள்ளது. இன்றைய சேப்பாக்கம் எழிலகக் கட்டடம் அன்று சேப்பாக்கம் அரண்மனையாக, நிஜாம்களின் கீழ் செயல்பட்ட நவாபின் அரண்மனையாகச் செயல்பட்டுள்ளது.
மைசூர் புலிகளும் மதரஸாபட்டினமும், மேமன் முஸ்லிம்களின் பட்டினம், மலபார் முஸ்லிம்களின் மதராஸ், அமீர் மகால் அமர்க்களம் ஆகிய தலைப்புகளிலான கட்டுரைகள் சுவைமிக்கவை.
சையது கானின் பேட்டை சைதாப்பேட்டையான வரலாறு, மதராஸின் மாமனிதர்கள் பற்றிய அரிய செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல், அனைவருமே படித்தறிய வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் எனலாம்.
நன்றி: தினமணி, 14/8/2016.