மதுரையின் அரசியல் வரலாறு 1868
மதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.360
தமிழக நகரங்களில் நீண்ட காலம் தலைநகரமாக விளங்கிய சரித்திரப் பெருமை மதுரைக்கு உண்டு. மதுரை என்பது நிலமும் மக்களும் சார்ந்த வெறும் நகரம் மட்டுமல்ல; கடல் கொண்ட முதலாம் தமிழ்ச் சங்கக் காலத்தை இன்னமும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும் தொன்மமும்கூட. மதுரையைப் பற்றிய வரலாற்று நூல்களுள் ஜேம்ஸ் ஹென்ரி நெல்சனின் ‘மதுரா கன்ட்ரி மானுவல்’ குறிப்பிடத்தக்க ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உதவும் நோக்கில், மாவட்ட விவரச்சுவடிகள் தயாரித்து வெளியிடப்பட்டன. அவ்வாறு, மாவட்ட விவரச்சுவடியாகத்தான் நெல்சனின் புத்தகமும் எழுதப்பட்டது.
ஆங்கில மூலத்தின் முதலிரண்டு பகுதிகளும் முறையே அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் நிலவியலையும், சாதிக் குழுக்கள் மற்றும் தாவர, விலங்கினங்கள் பற்றிய விவரங்களையும் அளிக்கின்றன. நான்காம் பகுதி, மதுரையின் வருவாய்த் துறை வரலாற்றையும் ஐந்தாம் பகுதி பல்வகைப்பட்டவை என்ற தலைப்பிலும் அமைந்திருந்தன. ஐந்தாம் பகுதியில் அன்றைய நிர்வாக, நீதி நிர்வாகங்கள் மட்டுமின்றி பொது சுகாதார நிலையைப் பற்றியும் இன்று பிரபல சமய வழிபாட்டுத் தலமான விளங்கும் பழநியைப் பற்றியும் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. தவிர, மதுரையின் மண் வகைகள், மழையளவு, கிராமங்கள், நகரங்கள் பற்றிய பின்னிணைப்புகளும் இடம்பெற்றிருந்தன. ஏறக்குறைய 1,000 பக்கங்கள் கொண்ட நெல்சனின் புத்தகத்தின் மூன்றாவது பகுதியிலிருந்த 11 அத்தியாயங்கள் மட்டும் ‘மதுரையின் அரசியல் வரலாறு’ என்ற தலைப்பில் ச.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மதுரையின் வரலாறு வழக்கம்போல திருவிளையாடற் புராணத்திலிருந்தே தொடங்குகிறது. முதல் அத்தியாயம், திருவிளையாடல்களின் சுருக்கம். இரண்டாவது அத்தியாயம் குலசேகரப் பாண்டியன் தொடங்கி கூன்பாண்டியன் வரையிலான 73 பாண்டிய மன்னர்களின் கால வரிசைப் பட்டியலை அளிக்கிறது. ஆனால், இந்தப் பட்டியல் பிற பட்டியல்களிலிருந்து சிற்சில இடங்களில் வேறுபடவும் செய்கிறது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூன்பாண்டியனின் மரணத்துக்குப் பிறகான மதுரையின் வரலாறு மூன்றாவது அத்தியாயத்திலிருந்தே தொடங்குகிறது. விசுவநாதனின் மதுரை வருகை தொடர்பான நான்காவது அத்தியாயத்திலிருந்துதான் மதுரையின் வரலாறு தெள்ளத்தெளிவாகத் துலங்குகிறது. கடம்பவனம் என்ற சமய நம்பிக்கையிலிருந்து தொடங்கி இரட்டைச் சுவர்களோடு அரண்கள் பலப்படுத்தப்பட்ட காவல் கோட்டமாக மாறியது வரையிலான மதுரையின் வரலாறு இது.
அரியநாயகம் முதலியார், மன்னர் திருமலை, ராணி மங்கம்மாள் என்று மதுரையின் வரலாறு எத்தனையோ வியக்கவைக்கும் ஆளுமைகளைக் கொண்டது. மதுரைப் பிராந்தியத்தில் ஆட்சிக் காலத்தை விவரிக்கையில் சேதுபதி மன்னர்களின் செல்வாக்கும் வரலாற்றில் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் கொண்டது. புனிதப் பயணிகள் பாதுகாப்புடன் சேதுமுனைக்கு வந்துசெல்ல ராமநாதபுரம் மன்னர்கள் அரணாக இருந்ததும் தங்களது மேலாண்மைக்குப் பங்கம் வர நேர்ந்தபோதெல்லாம் மூர்க்கமாக அவர்கள் மதுரை ஆட்சியாளர்களோடு மோதியதும் இந்தப் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.
டவ்சன், வில்சன், டெய்லர் என்று தென்னிந்திய வரலாற்றாசிரியர்கள் பலரது கருத்துகளை ஒப்புநோக்கியும், அதில் தனது மாறுபட்ட கருத்துக்கான காரணங்களை விளக்கியும் இந்த நூலை எழுதியிருக்கிறார் நெல்சன். இது மதுரையின் வரலாறு மட்டுமல்ல; தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி என்று மதுரைக்கு வடக்கும் தெற்குமாய் அமைந்த மற்ற நகரங்களின் வரலாறும்கூட. அரசியல் வரலாறோடு சமூக, பொருளாதார, சமய வரலாறாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. கிறிஸ்தவம் தமிழகத்துக்குள் பரவிய வேகமும் எதிர்கொண்ட சிக்கல்களும் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.
இந்திய மற்றும் தமிழக வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களைத் தமிழில் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது ‘சந்தியா’ பதிப்பகம். ‘இந்தியச் சடங்கும் நம்பிக்கைகளும்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கியமான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ச.சரவணன். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பெயர்கள் உச்சரிப்புப் பிரச்சினையால் ஆங்கில நூலாசிரியரால் தவறாகச் சுட்டப்பட்டிருக்கலாம் என்று பதிப்பாளர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், அந்த உச்சரிப்புப் பிழைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் சரிசெய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மறவர் நாட்டை மறவா நாடு என்றும், முத்து கிருஷ்ணப்பாவை முட்டு கிருஷ்ணப்பா என்றும் ஆங்கிலத்திலிருந்து அப்படியே ஒலிபெயர்ப்பது உறுத்துகிறது. குமார முட்டு, முட்டு வீரப்பா, முட்டு அழகாத்ரி என்று எல்லா முத்துகளுமே முட்டுக்களாகிக் கிடக்கின்றன. முத்துக்குப் பிரபலமான பாண்டிய நாட்டின் வரலாற்றை மொழிபெயர்க்கையிலும் ஆங்கில ஆசிரியர்களை அப்படியே முட்டுக்கொடுக்க வேண்டுமா என்ன?
இன்று மதுரை என்றாலே பயமும் பீதியும் நிறைந்த சினிமாக் காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன அல்லவா, அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. பாண்டியர்களுக்குப் பிறகு சுல்தானியர்கள், நாயக்கர்கள் காலத்தில் நிலையற்ற ஆட்சி நிலவியதன் காரணமான அமைதியின்மையின் வெளிப்பாடுதான் அந்த வன்முறைகள். இன்றும் அதன் எச்சசொச்சங்கள் அவ்வப்போது காட்சிக்கு வருகின்றன. மதுரையை சுல்தானியர்கள் ஆண்டதற்கான எந்தச் சான்றுகளும் இன்று அங்கு இல்லை, நாயக்கர்கள் ஆண்டதற்கான சாட்சியங்களாகச் சில கட்டிடங்கள் மட்டுமே. பிரிட்டிஷார் ஆட்சியின் சட்டங்களும் நெருக்கடிகளும் காலத்தால் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் வந்தபோதும் அதிகார மையங்கள் மாறியபோதும் மதுரை எப்போதும் அதன் போக்கிலேயே சென்றுகொண்டிருக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 29/8/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000029770_/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%201868
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818