மேடை நயம்
மேடை நயம், சொல் அரசு ஹபீபுல்லா, காமா பதிப்பகம், பக். 300, விலை 200ரூ.
தனது மிகச் சிறந்த மேடைப் பேச்சால், சொல் அரசு என்ற பட்டத்தைப் பெற்ற இந்நூலாசிரியர், ஏற்கெனவே மேடைச் சிதறல் என்று பிரபலமானவர்களின் மிகச் சிறந்த மேடை பேச்சுக்களை கொண்ட ஒரு நூலையும், மேடை நடை என்று மேடை பேச்சிற்கு வழிகாட்டியாக ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார்.
அவற்றுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, இந்நூலையும் வெளியிட்டுள்ளார். இதில் பல வகையான மேடைப் பேச்சாளர்களின் சொல் நயத்தினை, படித்து ரசிக்கும்படியாகவும், அதன் மூலம் தங்களின் சொல்லாற்றலை நன்கு வளர்த்துக் கொள்ளும் விதத்திலும் இந்நூலை அமைத்துள்ளார்.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள தமிழருவி மணியன் வாழ்த்துரை வழங்கும் கடமைக்காக, துளியும் ஆர்வமின்றி வாசிக்கத் தொடங்கி என் கை, இந்நூலில் உள்ள முந்நூறு பக்கங்களும் ஒரே மூச்சில் படித்து முடிக்கும்படி முழுமையாக வசியப்படுத்தி விட்டது என்று பாராட்டியுள்ளது இந்நூலின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மேடைப் பேச்சின் மூலம் சரித்திரம் படைத்த தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்கள் உள்பட உலகப் பேரறிஞர்கள் பலரையும், அவர்களின் வார்த்தைகள் மூலமே அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு புதிய முறையாக உள்ளது. இந்நூலில் அறிஞர் அண்ணா, ஆபிரஹாம் லிங்கன், கன்பூசியஸ், கார்ல்மார்க்ஸ், காந்திஜி, அம்பேத்கர், வின்ஸ்டன் சர்ச்சில், மாவீரர் நெப்போலியன், மகாகவி பாரதி, கவிஞர் கண்ணதாசன், பண்டித நேரு, பசும்பொன் தேவர், உ.வே.சாமிநாதஐயர் என்று நூற்றுக்கணக்கானவர்களின் நயமான பேச்சுத் திறன்களை இந்நூலில் தொகுத்துள்ளார். பேச்சுக்கலையை வளர்க்க விரும்புவர்கள் மட்டுமின்றி, மாணவ மாணவிகளுக்கும் இந்நூல் பெரிதும் பயன்தரக்கூடியது.
-பரக்கத்
நன்றி: துக்ளக்,13/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818