மெல்லக் கொல்லும் பால்

மெல்லக் கொல்லும் பால், டாக்டர் ஜெகதீசன், எம்.டி., டிசிஎச்., எம்.எஸ்சி., விலை 100ரூ.

பால் நல்லதா, கெட்டதா? என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயம் யார் வெல்வர் என்று நினைக்கிறீர்கள்? கெட்டது என்ற அணியினர் தான். காரணம் அதற்கான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி, புள்ளி விபரங்களோடு மருத்துவர் அவர்கள், மெல்லக்கொல்லும் பால் என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவர், முதுநிலை மரபியல் மருத்துவம் பயின்றவர்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர்.

ஒரு மருத்துவர் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் நூல் என்பதால், எளிதாக கருத்துக்களைத் தள்ள முடியாது.தாய்ப்பால் குழந்தைகளுக்கானது. அதுபோல், நியாயப்படி பார்த்தால் பசுவின் பால் கன்றுக்குத் தானே செல்ல வேண்டும்? ஆனால், கன்று அவ்வளவு பாலையும் குடித்தால், அது செரிமானம் இன்றி கழிச்சல் நோய் கண்டு சாகும் என்பது வேறு விஷயம்.

வைக்கோல் கன்றைக்காட்டி, மாட்டின் மடியை சுரண்டி, பால் கறப்பது குற்றமாகும்.
குழந்தைகளுக்கு காலை உணவை கொடுக்காமல் பாலைக் குடித்துவிட்டுப் போ என்ற நிலையில் தான், பல பெற்றோர் இருக்கின்றனர். அதேபோல், இரவிலும் கொடுத்து உறங்க வைக்கின்றனர். இப்படியான குழந்தைகளுக்கு இரவில், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோய் வருகிறது என்கிறார் டாக்டர் ஜெகதீசன்.

ஐந்து சதவீத மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொலஸ்ட்ராலும், அதனால் ஏற்படும் ரத்தக்கொதிப்பும், வருவதற்குக் காரணம் பசும்பாலும், அதனால் ஏற்படும் பருமனுமே காரணம் என்று கூறியிருக்கிறார் நூலில் (பக். 68). இரவில் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களுக்கு, பால் அருந்த கொடுக்கின்றனர் பெற்றோர். ஒரு குவளை பால் அருந்தினால், ஒரு மணி நேரத்தில் பீட்டா கேசோ மார்பின் (BCM7) என்ற போதைப் பொருள் உண்டாகி, ரத்தத்தில் கலக்கிறது. இந்த பீட்டா கேசோ மூளையை மழுங்கடிக்கச் செய்யும்(பக். 69) என்ற அதிர்ச்சித் தகவலும் இதில் உள்ளது.

இக்கருத்துக்கள் பலவற்றைப் பார்க்கும் பலரும், பால் இன்றி வேறு உணவு பாமரர்களுக்கு ஏது? அல்லது ஆட்டுப்பால் போன்றவை போதுமா என்று நினைக்கத் தோன்றும். மேலும், பால் அதிகம் கறக்க, அதற்கு தரப்படும் தீவனங்கள் அல்லது பசுக்கள் உண்ணும் பல்வேறு வகை முரண்பட்ட பொருட்கள், பாலில் தீய தன்மையை ஏற்படுத்துகின்றன என்பதும், இப்போது பேசப்படுகிறது. குறிப்பாக ‘ஜல்லிக்கட்டு பிரச்னை’ எழுந்த பின், நாட்டு மாடுகள் தரும் பால், அதிக புரதசத்து கொண்டது என்ற தகவலும் உண்டு.

ஆனாலும் பாலை மட்டும் பருகி, முழு ஊட்டச்சத்து ஒருவருக்கு கிடைக்குமா என்பதற்கு இந்த நூல் படிக்கும்போது, பல தகவல்கள் எளிதாக கிடைக்கும்.

-லலிதாமதி.

நன்றி: தினமலர், 19/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *