மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?
மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?, மரியா கொலாசோ, கிளாவெல்; தமிழில் சிவசுப்ரமணிய ஜெயசேகர்; அடையாளம், பக்.264, விலை ரூ.190.
அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் தொடங்கப்பட்ட மேயோ கிளினிக், இன்று பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அதை நடத்துபவர்கள் தங்களுடைய அனுபவம், அறிவின் அடிப்படையில் பல நோய்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்நூல்.
நீரிழிவு நோய் சிறுவர், பெரியவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் வரக்கூடிய நோயாக இருக்கிறது. போதிய உடற்பயிற்சியின்மை, உணவுமுறை, வாழ்க்கைமுறை மாறுதல்கள், மன அழுத்தம் என பல காரணங்களால் நீரிழிவு நோய் இன்று அதிகமாகிவிட்டது.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், நீரிழிவு நோயின் வகைகள்,நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியுமா? கட்டுப்படுத்த முடியுமா? நீரிழிவு நோயை அறிய என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? டைப் 1, டைப் 2 நீரிழிவுநோய்களின் தன்மை என்ன? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்? எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்? ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது? வயது, உயரம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான உடல் எடை எது? நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் பிற பாதிப்புகள் எவை? அவற்றை எவ்வாறு குணப்படுத்துவது? இதயநோய்கள், ரத்தநாள நோய்கள், சிறுநீரக நோய்கள் ஆகியவற்றுக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்புகள் எவை? என நீரிழிவு நோய் தொடர்பான அனைத்துத் தகவல்களும் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள நூல்.
நன்றி: தினமணி, 1/5/2017