விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், பக்.392, விலை ரூ.575.

இந்நூலை ‘நாவல் 39‘ என்று கூறி பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நாவலுக்குஉரிய எந்தவிதமான இலக்கணமும் இதில் இல்லை. தெளிவான கதை இல்லை; தொடர்ச்சியாகச் செல்லும் சம்பவங்கள் இல்லை; பல கதைகளின், சம்பவங்களின், தகவல்களின் தொகுப்பாக உள்ள இந்நூலில், எதுவுமே முழுமையான கதையாகப் பதிவு செய்யப்படவில்லை.

பல காலங்களில், பல இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், பல மனிதர்களின் மனக் குரல்களையே இது எதிரொலிக்கிறது. அதனால், இந்நாவலை வாசிப்போர்க்கு முதலில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவை. இதை ‘நாவல்39‘ என்று முன்னுரைப்பதில் சுகுமாரனின் ‘நவீன மரபு மனம் 39‘ மிகவும் சிரமப்பட்டிருப்பதை முன்னுரை தெரிவிக்கிறது.

சுவரொட்டியில் உள்ள ஆறு கேள்விகளுடன் தொடங்குகிறது கதை. இக்கேள்விகள் குறித்து அம்மாஞ்சியும், மிஸ்டர் டாஸ்மாக்கும் (குடிகாரனின் குரல்), பிச்சைக்காரரும் விவாதித்து கதையின் இடையிடையே வந்து போகிறார்கள். 1960களின் இறுதியில் வாழ்ந்த மனிதர்கள் பற்றிய கதை இது. கீழத்தஞ்சை கிராமத்தில் வாழும் இரண்டு பெண்கள், மைனராகிய மூவரின் வாழ்க்கையின் போக்கைப் பின்தொடர்கிறது கதை.

இவர்களைத் தவிர, காத்தானின் கூட்டம் பற்றிய கதை, காத்தானின் மகள் மணிமொழி-தமிழ்வாணனின் சீர்திருத்தக் காதல் கதை என ஒரு கதம்பமாக உள்ளது.

‘ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிகவும் பூடகமான விஷயங்கள், பெரும் சூழ்ச்சித் திறனோடு பொதித்து வைக்கப்பட்டுள்ளது. உட்பிரதியைக் கண்டெடுத்து வாசித்தல் என்பது உயர்நிலை வாசிப்பின் அடையாளம். ஒருவரும் இந்நாவலை சரியாகப் புரிந்துகொள்ளப் போவதில்லை. எல்லாத் தரப்பினரையும் சகட்டு மேனிக்கு இந்நாவல் பகடி (கேலி, கிண்டல்) செய்கிறது 39‘ என்று 21ஆவது அத்தியாயத்தில் வரும் இந்தப் பத்தியே இந்நாவலையும் (விடம்பனம்) விமர்சனம் செய்யப் போதுமானது.

இதை நாவல் என்பதைவிட நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றின் மீதுமான பகடி நிறைந்த விமர்சனம் என்று கூறலாம். இந்நாவலைப் போலவே இதிலுள்ள ஓவியங்களும் கலாரசனையுடன் கண்டு ரசிப்பவருக்கு மட்டுமே (ஓவியப்) புதிர் அவிழும்.

நன்றி: தினமணி, 1/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *