தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ.

இந்நூலாசிரியர் 1950-80-களில் தனது ‘கல்கண்டு’ பத்திரிகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற செய்திகளை வெளியிட்டு, பத்திரிகை உலகின் பாராட்டைப் பெற்றவர்.

ஜோதிடம், நாடகம், திரைப்படம், சித்தமருந்து, பல்பொடி தயாரிப்பு… என்று பல துறைகளிலும் இறங்கி, சுமார் 500 நூல்களை எழுதி சாதனை புரிந்தவர். தமிழ் பத்திரிகை உலகில் கேள்வி – பதில் பகுதியை ‘கல்கண்டு’ பத்திரிகையில் அறிமுகம் செய்து, வாசகர்களில் பலவகையான கேள்விகளுக்கும் சுவையான பதில்களை அளித்தவர்.

அவற்றில் சிறப்பானவற்றை அரசியல் கேள்விகள், நகைச்சுவை கேள்விகள், பொதுவான கேள்விகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து இந்நூலில் தொகுத்துள்ளார். நேருவுக்கு அடுத்த பிரதம மந்திரி யார்? தி.மு.க. பிளவுபட்டது எதைக் காட்டுகிறது? சம்பத்தின் குற்றச்சாட்டு என்ன? ஹிந்து எதிர்ப்புப் போராட்டத்திற்கு, ராஜாஜியிடம் போய் வழி கேட்டிருக்கிறாரே அண்ணாதுரை?’ இப்படி அன்றைய அரசியல் பற்றிய வாசகர்களின் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கும் மிகச் சுருக்கமாக, தெளிவான பதில்களைக் காணலாம்.

நகைச்சுவையான பிரிவில், ‘தலைவனுக்கும், தொண்டனுக்கும் என்ன வித்தியாசம்’ என்ற கேள்விக்கு ‘தலைவர் வீட்டைச் சோதனை போட்டால் கரன்சி நோட்டு கிடைக்கும். தொண்டர் வீட்டைச் சோதனை போட்டால் கட்சி நோட்டீஸ் கிடைக்கும்’ என்ற பதில் இன்றும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் காணலாம்.

அரசியல் மட்டுமின்றி, மருத்துவம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா, சமூகம், வெளிநாட்டுச் செய்திகள், ஆன்மீகம், கலாசாரம், வாழ்க்கை… என்று எந்தத் துறையைச் சார்ந்த கேள்விகளுக்கும் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஆசிரியர் பதில் கூறியுள்ளது பாராட்டத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 22/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *