மிஷன் தெரு
மிஷன் தெரு, தஞ்சை பிரகாஷ், வாசகசாலை, பக். 112, விலை 120ரூ.
அன்றைய ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ கள்ளர் குடும்பம் ஒன்றில், ஒற்றைப் பெண்ணாகப் பிறந்த எஸ்தர் என்கிற அழகும் அறிவும் நிரம்பிய ஒரு பெண்ணின் 33 வருட போராட்ட வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றமே இந்நாவல்.
அஞ்சாமை, ஆங்கிலப் புலமை, சங்கீத ஞானம், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த நோக்கம் – இவையெல்லாம் கொண்டிருந்த எஸ்தர், பல்வேறு தரப்பு ஆண்களாலும் எப்படியெல்லாம் வீழ்த்தப்பட்டாள் என்பதை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே கொண்டு வருகிறார் ஆசிரியர்.
வில்லி என்கிற வில்லியம்ஸýக்கும் எஸ்தருக்கும் இடையே மலரும் காதல், ஸ்டோன் துரையின் “நாகரிகப்’‘ பண்பு, லாசரஸின் கொடூர மனம், வீட்டுப் பெரியவர்களின் சுயசாதிப் பெருமை, தனது மகளின் காதலைக் கண்டு ஆவேசமாகப் பொங்கியெழும் எஸ்தரின் குரூர குணம்- இவையெல்லாமும் சற்றும் மிகையின்றி நம்பகத்தன்மையோடு சுவையாகச் சொல்லப்பட்டுள்ளன.
எஸ்தர் என்கிற பெண்ணைச் சுற்றியே கதை நடந்தாலும் அந்த காலகட்டத்தின் ஊர் அமைப்பு, பேச்சு வழக்கு, ஆட்சி முறை, உணவு, உடை, பண்பாடு போன்ற பலவும் கதையின் ஓட்டத்தைப் பாதிக்காதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.
தமிழில் பெண்களைப் பற்றிய புதினங்கள் ஏராளமாக வந்துள்ளன. பெண்ணின் பார்வையிலே சொல்லப்பட்ட கதைகளும்கூட உண்டு. ஆனால், எல்லாத் தகுதிகளுமுடைய ஒரு பெண் எதற்கும் தகுதியற்றவளாக இந்தச் சமூகத்தால் ஆக்கப்படுவதை “உள்ளது உள்ளபடி‘’ இந்த நாவலைப்போல வேறெந்த நாவலும் இவ்வளவு உரக்கக் கூறியதில்லை.
நன்றி: தினமணி, 6/2/2017.