மொழியின் நிழல்
மொழியின் நிழல், ந.பெரியசாமி, தேநீர் பதிப்பக வெளியீடு, விலை: 180.
படைப்பின் ஊற்றுக்கண்ணைத் தேடும் முயற்சி
கவிதை, நாவல், சிறுகதைத் தொகுப்புகள், நிகழ் நாடகங்கள், சுயசரிதங்கள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் பற்றிக் கவிஞர் ந.பெரியசாமி எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு ‘மொழியின் நிழல். இந்தப் புத்தகங்கள் தரும் அனுபவங்கள் பற்றி நிதானமாகப் பேசுவதோடு, அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல், சமூகப் போக்கையும் பதிவுசெய்யும் எழுத்து முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பெரியசாமி. புத்தகங்கள் தரும் அனுபவங்களை இரண்டு விதங்களில் இவர் வெளிப்படுத்துகிறார். முதலாவதாக, தன்னுடைய அனுபவம் சார்ந்த நிகழ்வுகளின் வழியாக விவரிப்பது. இரண்டாவது, மகத்தான படைப்பாளிகளின் அனுபவ மொழிகளை மேற்கொள்களாகப் பயன்படுத்துவது.
இப்படியான அணுகுமுறையானது ஒவ்வொரு படைப்பினுடைய அடிநீரோட்டத்தின் ஊற்றுக்கண்ணை அடையாளம் காட்டுவதாக உள்ளது. அடிப்படையில், இவர் ஒரு கவிஞர் என்பதால் புத்தகங்களை அணுகும் முறையிலும் கவித்துவமான விவரணைகள் சாத்தியப்படுகின்றன. உதாரணமாக, எழுத்தாளர் தமிழவனின் எழுத்தில் உலவும் மாய உலகை விவரிக்கும் கட்டுரையில் தனக்கு வந்த மாயக் கனவுகளைக் கொண்டு விவரிக்கிறார். கோணங்கியின் எழுத்து முறையை விவரிக்கும்போது, தான் சிறுவயதில் காண நேரிட்ட பாரதப் பூசாரியின் உடல்மொழியையும் மந்திர உச்சாடனத்தையும் குறிப்பிட்டும், நெல்மணிக்கான நன்றியைத் தெரிவிக்கும் கிளி உருவும் சீட்டைக் காண்பித்தும் விவரிக்கிறார். இப்படியான கவித்துவங்கள் கட்டுரைத் தலைப்புகளிலும் தென்படுகின்றன. இந்தப் புத்தகத்தில் அதிக அளவில் கவிதைத் தொகுப்புகளே இடம்பெற்றிருக்கின்றன; அதிகமும் பரிச்சயமில்லாத கவிஞர்களைக் கவனப்படுத்துவது முக்கியமான அம்சமாகும். இந்தப் புத்தகம் வாசகரின் பக்கம் நின்று பேசுகிறது; வாசக மனநிலையைப் படைப்பின் பக்கம் நகர்த்துகிறது. ஒரு புதிய வாசகர் ஒரு புத்தகத்தின் வழியாகப் பல விதமான புத்தகங்களைக் கண்டடைய வைக்கும் சிறந்த முயற்சி இது.
நன்றி: தமிழ் இந்து, 15/5/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031413_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818