நான் இராமானுசன்
நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், பக்.136. விலை ரூ.60.
விசிஷ்டாத்வைத தத்துவத்தை புதினப் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் புதிய முயற்சி இது. அதிலும் தத்துவம் தந்த ஆசார்யர் ராமானுஜரே தற்காலத்துக்கு ஏற்ப அதனைச் சொல்லும், “நான் கிருஷ்ணதேவராயன் பேசுகிறேன்’’ பாணியிலான கதைச் சொல்லல் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது.
பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல, அது அடையக் கூடிய நிலை என்பதை வஜ்ர சூசிகா (வைர முள்) உபநிஷதத்தின் துணையுடன் விளக்கியிருப்பது அருமை. பிராமணரல்லாத தமது குரு நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி வழிபட்ட மதுரகவி ஆழ்வார், பிராமணரல்லாத மாறனேர் நம்பிக்கு அந்திமக் கால பணிவிடை செய்த பெரிய நம்பி ஆகிய வைணவப் பெரியார்களின் சாதி பேதமில்லாத பண்பு, பாங்குடன் உரைக்கப்பட்டுள்ளது. பாமர மக்களுக்கு ஞான, யோக மார்க்கங்களைவிட பக்தி மார்க்கமே ஏற்றது என்ற வைணவப் பார்வையும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வைஷ்ணவமும், விசிஷ்டாத்வைதமும் தெரிந்த அளவுக்கு சைவமும், அத்வைதமும் நூலாசிரியருக்குப் புரிபடவில்லை என்பது தெரிய வருகிறது. வைஷ்ணவமும் விசிஷ்டாத்வைதமும் இணைந்திருப்பதைப் போல சைவமும் அத்வைதமும் ஒன்றெனக் கருதி மயங்குகிறார். சோழ மன்னர்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட அத்வைதம் பயன்பட்டதாகவும், பிரும்மமும் வல்லமை படைத்த அரசனும் ஒன்றே என அத்வைதம் கூறுவதாகவும்,வர்ணப் பிரச்னைக்கே சைவமும் அத்வைதமும்தான் காரணம் என்பதுபோலவும் இடம் பெற்றுள்ள கருத்துகள் ஏற்புடையனவாக இல்லை.
பிராமணன் மட்டுமே, அதிலும் ஸ்மார்த்தனாக இருந்து பின்னர் வைஷ்ணவப் பிறவி எடுத்த பிராமணன் மட்டுமே முக்தி பெற முடியும் என்று ஆதிசங்கரர் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பது நகைப்புக்கிடமாக உள்ளது. ஒருவகையில் வைஷ்ணவத்தை உயர்த்திப் பிடிப்பதில் வெற்றி பெற்றுள்ள இந்நூல், மறுவகையில் சனாதன சக மதங்களை அதிகமான அளவுக்குத் தாழ்த்தியுள்ளது. ராமானுஜரின் வார்த்தைகளில் சொன்னால், பாரதீய மெய்ஞானப் பார்வைக்கு இது பிரசன்ன வைரி (மறைமுக எதிரி).
அனைத்து ஹிந்து மதத் தத்துவங்களையும் தழுவிச் செல்கின்ற விஜயபாரதம் பதிப்பகம் இதனை வெளியிட்டிருப்பது வியப்பளிக்கிறது.
நன்றி: தினமணி, 30/7/2016