மின்னல் விளக்கு
மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு), சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக்.144, விலை ரூ.100.
மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, திருவள்ளுவர், ஆன்மிக – சமயப் பெரியோர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து 14 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அளித்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருந்திருந்தால் நூலாசிரியர் பதிவு செய்திருக்கலாம்.
புத்துப்பட்டு ஐயனார், புதுச்சேரி ஆரோவில் பற்றிய கட்டுரைகளில் அந்த இடங்களுக்குச் செல்ல யாரையும் வழிகேட்காமலேயே செல்லும் அளவுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.÷
நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சில வரலாற்றுப் பதிவுகள் பழைய தகவல்களாக இருந்தாலும், அவற்றை மீண்டும் நினைவுகூற இந்நூல் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“பலர் நினைக்கிற மாதிரி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்குக் காரணம் காந்தி மட்டுமல்ல, காந்திக்கு முன்னும், பின்னும் தேசிய அளவில் பல தலைவர்கள் விடுதலை வேள்வியில் தங்களை ஈடுபடுத்தி, தங்களுடைய இன்னுயிரைத் துறக்கவும் தயாராக இருந்தார்கள்” என்று துணிந்து பதிவு செய்திருப்பது அருமை.
அனைவரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகி வாழ்தல் அவசியம்; அவ்வாறு ஒழுகாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவர்களே என்று பழிக்கும் திருவள்ளுவரின் கருத்துகளைப் பதிவு செய்திருப்பது இன்றைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று.
தகவல்களை அளிப்பதாக மட்டும் அமையாமல், படிப்பவரைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 25/7/2016