நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம்
நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம் , பக். 296; ரூ.200.
பன்னிரு ஆழ்வார்களுள் ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப்படுபவர் நம்மாழ்வார். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த போதிலும், கலியன் எனப்படும் திருமங்கையாழ்வார்தான் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவர். இவர் ஏன் இவ்வாறு போற்றப்படுகிறார் என்னும் காரணத்தை, “பெருமானிடம் ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணியவர் ஆழ்வார் என்று அதாவது – பெருமானும் பிராட்டியும் புதுமணத் தம்பதிகளாக வந்தபோது, அவர்களை வழி மறித்து, அவர்கள் ஆபரணங்களை எல்லாம் பறித்தார். அவற்றை ஒரு பெட்டியில் வைத்து எடுக்கப் பார்க்க, எடுக்க முடியவில்லை. “என்ன மந்திரம் போட்டாய்? எனக்குச் சொல்?’ என்று பெருமானை அதட்டினார் ஆழ்வார். பெருமானும் அஷ்டாக்ஷரம் ஆகிய திருமந்திரத்தை ஆழ்வாருடைய செவியில் ஓதினான். இப்படி எம் பெருமானிடமிருந்தே, மிக முக்கியமான அஷ்டாக்ஷரத்தை க்ரஹித்தார் கலியன். இதைத்தான் “ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணினார் ஆழ்வார்’ என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
இத்தகைய பெருமைக்கும் புகழுக்கும் உரிய திருமங்கையாழ்வார், ஆறு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவற்றுள் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகிய மூன்று பிரபந்தங்கள் மட்டும் இந்நூலில் உள்ளன.
அடியார்கள் பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் மிகப்பெரிய எழுத்துகளில் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது சிறப்பு. இந்நூலின் கூடுதல் சிறப்பு, பாசுரங்களை நிறுத்தி சேவிப்பதற்கான அடையாளத்தையும், ஒரு பாசுரத்தை இரண்டு முறை சேவிப்பதற்கான அடையாளத்தையும், முன்னடி நிறுத்துமிடத்திற்கான அடையாளத்தையும் நட்சத்திரக் குறியீடுகள் (*) மூலம் தந்திருப்பது.
நன்றி: தினமணி, 17/4/2016.