நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்
நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள், பாவெல் சக்தி, எதிர் வெளியீடு, விலை: ரூ.399
நீதித் துறையின் மீது ஒரு குறுக்கு விசாரணை
எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து எளிய மனிதர்களும்கூடத் தங்களது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் பொன்விதிகளில் ஒன்று: ‘போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஆஸ்பத்திரி மூன்றுக்கும் மனிதன் போகக் கூடாது’. எழுத்தாளரும் வழக்கறிஞருமான பாவெல் சக்தி, பின்நவீனத்துவ எழுத்துக்காரர்களை இந்த மூன்றின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று இந்தக் கதைத் தொகுப்பின் வழியே அழைப்புவிடுத்திருக்கிறார். தொழிலின் நிமித்தம் அவர் தினசரி புழங்கிக்கொண்டிருக்கும் இந்த வளாகங்களுக்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச்சென்றிருக்கிறார்.
காவல் நிலையத்தில் அடியெடுத்து வைப்பவர்கள் பின்பு நீதிமன்றத்துக்கும் இவை இரண்டுக்கும் செல்பவர்கள் பின்பு மருத்துவமனைக்கும் சென்றுதான் ஆக வேண்டும். இம்மூன்றுக்குமே செல்ல நேர்ந்த ஒரு கிராமத்துக் கனவானை இந்த அமைப்புகள் எப்படி மனப்பிறழ்வுக்கு ஆளாக்கி அனாதைப் பிணமாகச் சாகடிக்கின்றன என்பதைச் சொல்கிறது பட்டாளத்தாரின் கதை. வழக்கறிஞர்கள் தாமாக முன்வந்து வழங்கும் ஆலோசனைகள் குடும்ப உறவுகளுக்குள் எப்படியெல்லாம் சிதைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம். கிராமத்தில் எத்தனையோ சச்சரவுகளைத் தனது சமரசத்தால் தீர்த்துவைத்த பட்டாளத்தார், கையில் மஞ்சப் பையோடும் அதற்குள் பழுப்பேறிய காகிதங்களோடும் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி இறுதியில் தோற்றும் போகிறார். மனப்பிறழ்வுக்கு ஆளானவர்கள் வழக்கமாக வந்து வசைபொழிந்து செல்லும் இடங்களாகத்தான் நமது நீதிமன்றங்கள் இருக்கின்றன. எனினும், தளராத நம்பிக்கையுடன் மஞ்சள் பையில் ஆவணங்களைச் சுமந்துகொண்டு வந்துசெல்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
செய்த குற்றத்திலிருந்து எளிதில் தப்பித்துக்கொண்ட ஒருவன், செய்யாத குற்றத்துக்கு எப்படிப் பழியேற்றுக்கொள்ள நேர்கிறது என்பதைச் சொல்கிறது வக்கீல் விஜயன் நாயரைச் சந்திக்க வரும் ஒரு கட்டுமானத் தொழிலாளியின் கதை. நீதியமைப்பில் வழக்காடும் மன்றங்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர் அலுவலகங்களும் எப்படி ஒரு குற்ற உடந்தையாளராகத் தமது பொறுப்பை ஆற்றுகின்றன என்று துல்லியமாக விவரிக்கிறது இந்தக் கதை. குற்றவாளிகள் என அறிந்தும் அவர்களைப் பாதுகாக்கத் தயங்காத வழக்கறிஞர்களின் அலுவலகப் பூஜா விதிமுறைகள், ஒரு நகைமுரணையும் தோற்றுவிக்கின்றன. கூடவே, சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா வணிகத்தின் வலைப்பின்னல்களையும் விவரிக்கும் இந்தக் கதையில் கஞ்சாவுக்கு வழங்கப்படும் 14 பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறார் பாவெல் சக்தி.
சமூகப் பொறுப்புணர்விலிருந்து பொங்கிவரும் கோபத்தை மட்டுமல்ல, காதல்வயமான இதயங்களின் உணர்வுகளையும் திறம்பட எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியம் படிக்கும் இருவரிடையே முகிழ்க்கும் காதலையும், அதை அவர்கள் வெளிப்படுத்திக்கொள்ள முடியாத குடும்பச் சூழல்களையும் சொல்லும் அமீரின் நாட்குறிப்புகளைப் படிக்கையில் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் உணர்வே மேலெழுகிறது. நெடுநல்வாடையும், களிற்றியானை நிரையும், கலித்தொகையும், காமத்துப் பாலுமாய் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் இடையிடையே ஊடுபாவாய் ஒளிகாட்டுகின்றன.
நீதிமன்ற வளாகங்களில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படும் வணக்கங்களில் இயந்திரத்தனமும் நாடகத்தனமுமே நிறைந்து வழிவதை இந்தக் கதையின் போக்கிலேயே ஓரிடத்தில் சுட்டிக்காட்டிச் செல்கிறார் பாவெல் சக்தி. சட்டப் புத்தகங்களுக்கு வெளியே வேறு சில புத்தகங்களையும் வாசிக்கும் சில விதிவிலக்கான வழக்கறிஞர்கள், இந்த இயந்திரத்தன்மைக்கு நடுவில் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதையும் எழுதியிருக்கிறார். அவர்களின் கைப்பிடித்துத் தொழில்பழகும் இளம் வழக்கறிஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தொழில்பழக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக வருமானத்துக்கு எந்த வாய்ப்பும் இல்லாத சலிப்பு நிறைந்த பணிகளை இளம் வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் நிலையும் அமீரின் கதையோடு சேர்த்துச் சொல்லப்படுகிறது. ஒருவேளை, நீதித் துறை தனது இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டு மூளையால் மட்டுமே இயங்குவதற்கான அஸ்திவாரம் அப்போதுதான் இடப்படுகிறதோ என்ற எண்ணமும் பிறக்கிறது.
சட்டப்பிரிவுகளும் மேலமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளுமே நீதி அமைப்புகளை வழிநடத்துகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. அவற்றில் நியாயம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு அந்த அமைப்புகளுக்குக் கால அவகாசமில்லை. ஆனால், சட்டப்படியான அந்தத் தீர்ப்புகள் எத்தனை பேரின் உயிர்களைக் குடிக்கிறது, எத்தனை பேரை மனம்பிறழ்ந்த நிலையில் அலையவைக்கிறது, எத்தனை பேரைப் பிச்சைக்காரர்கள் ஆக்குகிறது என்பதைக் குறித்தே இந்தத் தொகுப்பின் மற்ற கதைகளும் பேசுகின்றன. நாவல்களாக எழுத உத்தேசிக்கப்பட்டு, நெடுங்கதைகளாக வடிவம் கண்டிருக்கும் இந்த எட்டுக் கதைகளும், தன்னளவில் போதுமான களங்களையும் கதைமாந்தர்களையும் கொண்டிருக்கின்றன என்றாலும் நீதிமன்றத்தில் வழக்காடியாகவோ குற்றஞ்சாட்டப்பட்டவராகவோ பாதிக்கப்பட்டவராகவோ ஆளான ஒருவரையே மையப்படுத்துகின்றன. அதன் வழியே, நீதித் துறையின் மீது ஒரு குறுக்கு விசாரணையை நடத்தியிருக்கிறது இந்தத் தொகுப்பு.
– செல்வ புவியரசன்
நன்றி: தமிழ் இந்து, 19/12/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030762_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818