இந்திர நீலம்
இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150
இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள்.
சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘இந்திர நீலம்’.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனலாம். காவியக் காலம் முதல் தற்காலம் வரையுள்ள பெண்களின் மனத்திரையை விலக்கிப் பார்ப்பதை இந்தப் புனைவுகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. திரௌபதி, கண்ணகி, பிருந்தாவனத்து கோபியர்கள், மாதவி, காரைக்காலம்மையார், நக்கன் (சிவன் கோயில்களில் பணியாற்றிய தேவரடியார்கள்), பாமா (நவீன காலம்) போன்றோரின் காதல், காமம் குறித்த கதையாடலை அறிய முயல்வதுதான் இந்தத் தொகுப்பின் நோக்கம். திரௌபதி முதல் பாமா வரையுள்ள பெண்களுக்குக் காமம் என்பது சுயவிருப்பம் சார்ந்து அமையவில்லை என்ற பொதுக்குரலை இந்தத் தொகுப்பு காத்திரமாக ஒலிக்கிறது.
பெண்கள் காமத்தைப் பற்றிப் பேசுவதென்பது இன்று வரை ஒரு மனத்தடையாகவே இருந்துவருகிறது. ஆணின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்குரிய இடமே அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலுள்ள பெண்கள் அதற்கு எதிரான முனகலைப் பதிவுசெய்கிறார்கள். அதில், திரௌபதியின் குரல் மட்டுமே முன்னோக்கி ஒலித்திருக்கிறது. பிறர் ஏற்கெனவே தாங்கள் இடம்பெற்றுள்ள பிரதிகளைத் தாண்டி ஒலிக்கத் தயங்கியிருக்கிறார்கள்.
காரைக்காலம்மையாரை நவீன இலக்கியங்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதே இல்லை. ஆண்டாள் கவனிக்கப்பட்ட அளவுக்குப் புனிதவதியார் ஏன் கவனிக்கப்படாமல் போனார் என்பது அரசியல் கேள்வி. அந்த வகையில் ஆண்டாளை விடுத்து அம்மையாரைத் தெரிவுசெய்தமைக்கு அ.வெண்ணிலாவைப் பாராட்ட வேண்டும்.
தன் இரவுகளை ஐவருக்கும் பகிர்ந்தளித்த திரௌபதி, ஒவ்வொரு இரவையும் எவ்வாறு எதிர்கொண்டிருப்பாள்? கற்புக்குக் குறியீடாகிப்போன கண்ணகி தன் ஆழ்மனதில் கோவலன் குறித்து என்ன நினைத்திருப்பாள்? தன் அம்மாவின் விருப்பத்துக்காகப் பௌத்தத்துக்குள் இறங்கிய மணிமேகலை தன் காதலை எப்படிப் புதைத்திருப்பாள்? கணவனுக்காகத் தன் அழகைக் காத்துவந்த புனிதவதி, திடீரென இறைவனிடம் பேய் உருவம் கேட்டதற்குக் கணவனின் இரண்டாவது திருமணம் மட்டும்தான் காரணமா? இந்த இடைவெளிகளை நிரப்ப முயன்றிருக்கிறார் அ.வெண்ணிலா!
– தமிழ்மாறன்
நன்றி: தமிழ் இந்து, 19/12/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818