நைரா

நைரா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 190, விலை ரூ.150.

வர்த்தகத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழ் மண்ணுக்குப் புலம் பெயர்ந்து வந்த நைஜீரிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாவல் நைரா. உலகமயமாக்கலின் தாக்கத்திலும், அந்நிய தேச கலாசார பன்முகத்திலும் சிக்கித் தவிக்கும் நைஜீரிய இளைஞன்தான் கதையின் நாயகன். கண்டங்கள் தாண்டி வந்த மக்களும் கடை விரித்து காசு பார்க்கும் தொழில் நகரமான திருப்பூரின் பின்னணியில் விரிகிறது இந்நாவல்.

பண்பாட்டிலும், உருவ அமைப்பிலும், மொழியிலும் வேறுபட்ட ஒரு சமூக மக்கள், மாற்று தேசத்தில் பிழைக்க வரும்போது அவர்கள் சந்திக்கும் வேதனைகளும், அனுபவங்களும் உணர்வுப்பூர்வமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

கதையில் வரும் நைஜீரிய இளைஞனை சிநேகிக்கும் தமிழ்ப் பெண் ஒருத்தியின் மனவோட்டத்தின் வாயிலாக திருப்பூர் நிறுவனங்களில் பணியாற்றும் மொத்தப் பெண்களின் அவல நிலையையும் பேசுகிறது இந்நாவல்.

நைஜீரிய நாட்டு செலாவணியின் பெயர் நைரா. இந்திய ரூபாயை விடக் குறைந்த மதிப்புடைய அந்தப் பணத்தைச் சம்பாதிக்க அந்நாட்டு மக்கள் அடைகின்ற வேதனைகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நைஜீரிய மக்களின் உணர்வுகள் ஒரு புறமிருக்க, துணி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ரணங்களையும், நாவலின் பக்கங்களில் இழையோட விட்டிருக்கிறார் ஆசிரியர்.

நன்றி: தினமணி, 8/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *