நல்ல சோறு

நல்ல சோறு, ராஜமுருகன், விகடன் பிரசுரம், பக். 176,விலை 120ரூ.

கேழ்வரகு அல்வா, குதிரை வாலி கீரை ஃப்ரைடு ரைஸ், தினை பால் கொழுக்கட்டை, கேழ்வரகு லட்டு, சோள கார பணியாரம், கம்பு காரப் புட்டு, சாமை ஆப்பம், சாமை கொழுக்கட்டை, பனிவரகு பால் பணியாரம், தினை பர்ஃபி, கொள்ளு லட்டு… இவ்வாறு சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பல உணவுப் பொருட்கள், இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றின் செய்முறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உடனே இது சமையற் குறிப்பு நூல் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்.

அதற்கும் மேலாக, ஒவ்வோர் உணவு வகைகளிலும் உள்ள சத்துகள், உடலுக்கு அவை செய்யும் நன்மைகள், உணவுப் பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? என உடல் நலம் சார்ந்து இந்நூலில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் பலர் அறியாதவை; பயன்மிக்கவை.

எடுத்துக்காட்டாக, “வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தச் சொல்வார்கள். ஆனால் வெல்லத்தின் நிறத்தை அதிகரிக்க சோடா உப்பு, சல்ஃபர், பொட்டாசியம், வாஷிங் சோடா என பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். எனவே நாட்டுச் சர்க்கரையை வாங்கும்போது அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும் நாட்டுச் சர்க்கரையையே வாங்க வேண்டும்.“

“ரசாயனம் கலக்காமல் இயற்கையாக விளைந்த கீரையில் பூச்சி கடித்த ஓட்டை இருக்கும். அப்படியான கீரைகளைத் தயக்கமின்றி வாங்கலாம்.’‘

“வேலை முடிந்ததும் “ரெஸ்ட் எடுக்கிறேன்‘’ என சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளைக் கொறித்துக் கொண்டே பெண்கள் டி.வி.பார்க்கிறார்கள். இல்லையென்றால் “அக்கடா‘’ என்று படுத்துத் தூங்குகிறார்கள். இரண்டுமே உடல்நலத்துக்குக் கேடு.’‘

“உடல் எடையைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டப்பா உணவுகளில் நார்ச்சத்து மிக அதிக அளவில் இருக்கும். அதிகமான நார்ச்சத்து, குடல் புண்ணை உருவாக்கி, ரத்தக்கசிவை உண்டாக்கும்.’‘

இவ்வாறு நிறையக் குறிப்பிடலாம். உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், நாக்குக்கு அடிமையாகி வாழ்பவர்கள் அதிகம் உள்ள இக்காலத்தில், இந்நூல் தரும் செய்திகள் மிக முக்கியமானவை; தேவையானவை.

நன்றி: தினமணி, 24/10/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *