ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, ஆர். வைத்தியநாதன், ஸ்ரீசங்கராலயம், பக். 208, விலை 250ரூ.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதிசங்கரர் முதல் அம்மடத்தின் தற்போதைய பீடாதிபதிகளான ஜயேந்திரர், விஜயேந்திரர் வரையிலான எழுபது குருமார்களின் வரலாற்றை எல்லாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (குருரத்னமாலிகா பாணியில்) எளிய தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர்.

ஒவ்வோர் ஆச்சார்யாருடைய பூர்வாசிரம பெற்றோர், பிறந்த ஊர், ஆற்றிய பணிகள், முக்தியடைந்த ஊர், நாள் முதலிய செய்திகளைத் திரட்டிக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க பணி.

பெரும்பாலான ஆச்சார்யார்களைப் பற்றிய குறிப்புகள் மிகவும் சுருக்கமாக இருப்பினும், ஆதி சங்கரர், போதேந்திர ஸரஸ்வதி, மகா தேவேந்திர ஸரஸ்வதி, சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (மகா பெரியவா) போன்ற சில ஆச்சார்யார்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆதிசங்கரரின் அரும்பணிகள்.

அவர் பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு அத்வைத பீடங்களை நிறுவியது, ஐந்து தெய்வங்களை ஒரே நேரத்தில் வழிபடும் பஞ்சாயதன பூஜை முறையை அறிமுகப்படுத்தியது, வழிபடப்படும் கடவுளுக்கேற்ப இந்து மதத்தை ஆறு சமயங்களாக வகுத்தது, பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியது, சிவபெருமானைப் போற்றிப் பாடி சிவனிடமிருந்து பஞ்ச ஸ்படிக லிங்கங்களைப் பெற்றது, விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, ராமர் போன்ற கடவுள்களைப் போற்றி ஏராளமான சுலோகங்களை இயற்றியது – இப்படி அவர் தனது 32 வருட வாழ்நாளில் ஆற்றியுள்ள தெய்வப்பணிகள் வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துகின்றன.

இந்நூலில் பின்னிணைப்பாக சங்கர மடம் ஆற்றி வரும் சமூகப் பணிகள், மடத்தின் கிளைகள், ஊர்களின் விவரம் (புகைப்படங்களுடன்) அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் குறித்து ஐயமின்றி அறிய உதவும் கையேடு இந்நூல்.

நன்றி: தினமணி, 24/10/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *