நீதி நூல்களில் உடல் நலம்

நீதி நூல்களில் உடல் நலம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், பக். 160, விலை 135ரூ.

மனிதனிடம் உள்ள மதிப்புயர்ந்த செல்வங்கள், அவன் நோய்வாய்ப்படும்போது மருந்து வாங்கியே அழிந்துவிடுகின்றன. அதனால்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது தமிழ் நீதி. நீதி நூல்களில் காணப்படும், உடல்நலம் குறித்த கருத்துக்கள் குறித்தும் இந்த நூல் தொகுத்தும், பகுத்தும் பேசுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அற நூல்கள், அறநெறிச்சாரம், ஆத்திசூடி, சதகங்கள் ஆகிய இலக்கியங்கள் இதற்கு ஆய்வுக் களங்களாக விளங்குகின்றன. உடலும் உயிரும், மருந்து, சினம், கள்ளும் சூதும், காமம் ஆகிய ஐந்து பெரும் தலைப்புகளில் விஷயங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. ‘உடலும் உயிரும்’ என்ற தலைப்பில் உடல், உயிர் பற்றிய நீதி நூல்களின் குறிப்புகள் முதற்கண் அளிக்கப்படுகின்றன.

பின் அன்றாட வாழ்வில், உடலை பேணுதல் குறித்த அறிவுறுத்தல்கள் விவரிக்கப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, தினசரி தலைக்கு குளித்தல். ஆசனம், யோகத்தால் உடல்நலத்தைக் காக்கும் திருமூலர் நெறியும், உடல் நலம், மனநலம், ஒழுக்க குணங்கள் பற்றி முதலில் எடுத்துச் சொல்கிறார். ஆசாரக்கோவை கூறும் நல்ல பழக்கங்களையும் காட்டுகிறார்.

தீயவை செய்யும் மனலைகளையும் நல்லவை செய்யும் மனநிலைகளையும் விரிவாக எழுதியுள்ளார். மருந்து, அதிக உணவாலும், உடல் நோயாலும் அவதிப்படுவோருக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை திருக்குறள், திருமந்திரம், முதுமொழிக்காஞ்சி நூல்களால் விளக்கி உள்ளார். சினத்தால் வரும் நோய்கள் அதிகம் என்பதும், கள்ளும் சூதும் உடலையும், மனதையும், செல்வத்தையும் கெடுத்து வாழ்வையும் அழித்து விடுவதும் சொல்லப்படுகின்றன.

மிதமான காமம் நன்மையது. பெருங்காமம் நோயானது என, நீதி நூல்கள் எச்சரிக்கின்றன. நீதி நூல்களில் உள்ள தகவல்கள் இன்றைய சமுதாயத்திற்கும் ஏற்றது என்பதைக் காட்டுகிறது.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி: தினமலர், 14/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *