நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, தினமணி கட்டுரைகள், அ. அறிவுநம்பி, சித்திரம்,பக். 160, விலை 120ரூ.

தினமணியில் வெளியான 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
மொழி, சமூகம், நாடு தொடர்பான நூலாசிரியரின் தெளிவான கருத்துகள் இடம்பெற்றுள்ள இக்கட்டுரைகள், மிகவும் எளிமையானவை என்பதைக்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

“அறம் என்பதை முதலீடாகக் கொண்டு பொருள் சேர். இரண்டின் அடிப்படையில் இன்பம் தானாக வந்து சேரும்‘’ என்று வாழ்வதற்கான நெறிமுறையைச் சொல்வதும், “சொல்லில் இனிமை கலந்து பேசும்போது எதிரியும் நண்பனாவான்; மாறாக வன்மை கலந்து உரையோடும்போது நண்பன் கூட எதிரியாக வடிவம் கொள்கிறான்’‘ என்று இனிமையாகப் பேசச் சொல்வதும், வரதட்சணைப் பிரச்னையால் பெண்களின் வாழ்க்கையில் சிக்கல்கள் மிகுந்திருக்கும் இக்காலத்தில், “பண்டைய தமிழகத்தில் வரதட்சணை என்பதேயில்லை. மாறாக, மாப்பிள்ளைதான் பெண்ணுக்குப் பரிசம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தர வேண்டும்’‘ என்ற தகவலைச் சொல்வதும், காதலைப் பற்றி, “ஆண், பெண் வாழ்வில் காதல் என்பது இயற்கையாய்த் தோன்றும் அருமையான உணர்வு என்பது மெய். ஆனால், காதலிப்பவர்களும் மெய்யானவர்களாக இருக்க வேண்டும்‘’ என்று கூறுவதும் நூலாசிரியரின் சீரிய சிந்தனைத் திறனுக்கான சான்றுகள்.

எளிமையும் இனிமையும் நிறைந்த இக்கட்டுரைகள் அறிவார்ந்த தளத்தில் ஆழமாகப் பயணிப்பவை என்றால் அது மிகையில்லை.

நன்றி: தினமணி, 14/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *