பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, பக். 896, விலை 950ரூ.
ஆதித் தமிழர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும், அரசாட்சியையும் விளக்கிக் கூறும் ஆவணப் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது.
பொதுவாக சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நூலாசிரியர், இவற்றுடன் கூட வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் பார்வையிலும் பழந்தமிழனின் வாழ்வை அணுகியிருக்கிறார்.
கிமு 500-ஆம் ஆண்டு காலங்களில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகள் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அந்த அளவுக்கு வர்த்தகத்தில் தலைசிறந்தவர்களாக நாம் விளங்கியதும் இந்நூலின் வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது.
அதுமட்டுமன்றி, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையிலான காலம் என்பது ஆய்வுகளின் வாயிலாக நூலில் உணர்த்தப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான வணிகக் கப்பல்கள் தமிழகத்தின் உற்பத்திப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கே பயன்பட்டன என்றும், சாங்கியச் சிந்தனைகளைத் தோற்றுவித்த தொல்கபிலர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் பல்வேறு புதுத்தகவல்களைத் தருகிறது இந்நூல்.
இனக்குழு வரலாறு குறித்து முன்னெப்போதும் கேட்டிராத பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.தமிழர் வரலாறு தொடர்பாக வெளியான ஆய்வு நூல்களில் இந்நூல், ஒரு முக்கியமான ஆவணப் பதிவு.
நன்றி: தினமணி, 14/11/2016.