ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை, நாகேஸ்வரி அண்ணாமலை, அடையாளம் வெளியீடு, பக். 332, விலை 270ரூ.
5 தலைமுறைகளைச் சேர்ந்த 25 பெண்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.பெண்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கையின் நிலையைப் பற்றியும் பேசுகிறது.
சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஜாதிய நடைமுறைகள், எதிர்காலத்தை, குறிப்பாக திருமணத்தைத் தீர்மானிப்பதில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுதந்திரம் என்ன என்பது போன்ற முக்கிய பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அன்றைய சமூக நடைமுறைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது நடத்தப்படும் சடங்குகள், கூட்டுக் குடும்ப முறை, மாமியார் – மருமகள், கணவன் – மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளுக்கு இடையே நடைபெற்ற சிக்கல்கள் குறித்தும் இதில் அலசப்படுகிறது.
பெண் சுதந்திரம் குறித்து இன்று பேசப்பட்டு வந்தாலும் கணவன், மனைவி உறவில் உள்ள சில அடிப்படை விஷயங்கள் இன்றளவிலும் மாறவில்லை என்றும், பெண்களே அதை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் அதற்குக் காரணங்களாக உள்ள கசப்பான உண்மைகளையும் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 14/11/2016.