திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400.
பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது.
இந்நூலில் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், திருவள்ளுவர், பரிமேலழகர் மற்றும் வடிவேல் செட்டியாரின் வாழ்க்கை வரலாறுகள், திருவள்ளுவமாலை, மு.வ.வின் முன்னுரை, தமிழறிஞர்கள் பலரின் பாராட்டுரைகள், வடிவேல் செட்டியாரின் முதல் பதிப்பு மற்றும் இரண்டாம் பதிப்பின் முகவுரைகள் என அரிய பல சுவையான தகவல்களும் உள்ளன.
சங்க இலக்கியம், இலக்கணம், பகவத்கீதை, மனு ஸ்மிருதி, சைவ சித்தாந்தம், வேதாந்தம், உபநிடதம் முதலியவற்றைக் கொண்டு தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் வழங்கியுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு.
இலக்கணச் செல்வர் பாலசுந்தரனார் எழுதிய “தமிழும் யானும்‘’ என்னும் நூலில் காணப்படும் கோ.வடிவேல் செட்டியார் பற்றிய சுவையான நிகழ்ச்சி படித்து சுவைக்கத்தக்கது. நூலின் கட்டமைப்பே இதை எடுத்துப் படிக்கத் தூண்டும்.
இவ்விரு தொகுதிகளும், ஒவ்வொரு கல்லூரிப் பேராசிரியரிடமும், விரிவுரையாளரிடமும் இருக்க வேண்டிய சிறந்த ஆவணம்.
நன்றி: தினமணி, 14/11/2016.