தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும், இரா. காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 156, விலை 125ரூ.

குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய – மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது ஆசிரியருக்கு ஊதியம் தர பணம் இல்லாத நிலையில் தனது நூல் அரங்கேற்றத்தின்போது கிடைத்த கடுக்கன்களை விற்று ஆசிரியருக்குப் பணம் கொடுத்ததும் நெகிழ்வான நிகழ்வுகள்.

சாமி. சிதம்பரனார் 1921-இல் மதுரை தமிழ்ச்சங்கத்தில் பயிலும்போதே வெண்பா யாப்பில் அமைந்த “நளாயினி கதை‘’ என்கிற காப்பியத்தை இயற்றினார் என்பது வியப்பளிக்கிறது. பிறப்பால் இஸ்லாமியராகவும், மொழியால் தமிழராகவும், நாட்டால் இந்தியராகவும், பண்பால் மனிதராகவும் வாழ்ந்த கவி. கா.மு. ஷெரீப், காஷ்மீரைப் பற்றி பாடியுள்ள பாடல் அவரது தேசப்பற்றின் அடையாளம்.

“இன்று தமிழ்நாட்டிற்கு வேண்டியவர்கள் யாரெனின், ஆன்றமைந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே’‘ என்று தனிநாயக அடிகள் அன்று கூறியது இன்றும் பொருந்துகிறது. மொழியியல், இலக்கியம், கவிதை, கதை, கட்டுரை, திறனாய்வு முதலிய பலதுறை ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல் இது

நன்றி: தினமணி, 14/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *