நீங்களும் எடை குறைக்கலாம்!
நீங்களும் எடை குறைக்கலாம்! டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத, வெளியீடு: விஜிஎம் மருத்துவமனை, பக்.180, விலை ரூ.150.
தொப்பை, அதிக எடை, உடல் பருமன் எல்லாமே ஆரோக்கியத்துக்கு ஆபத்தான அறிகுறிகள். ஆனால், இதைப் பலரும் நம்புவதில்லை. உடல் எடை தானாக அதிகரித்தது போன்று, தானாகவே ஒரு கட்டத்தில் குறைந்து விடும் என்று நம்புகிறார்கள். உடல் எடை தானாக அதிகரிக்காது. தானாக குறையவும் செய்யாது என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை. மேலும், அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உருவாகவே இல்லைஎன வருத்தப்படுகிறார் நூல் ஆசிரியர்.
குண்டாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் எனக் கருதி குழந்தைகளைப் பெற்றோர் வளர்க்கிறார்கள். இதனால் உடல் பருமனை நோயாக நினைப்பதில்லை. கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பிறகுதான் உடல் பருமன் ஆபத்து குறித்துப் புரிந்து கொள்கின்றனர். எனவே, உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல நோய்களிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை விளக்குகிறது இந்த நூல்.
மனிதன் தானே உருவாக்கிக் கொள்ளும் நோய்களுக்குக் காரணமான முதல் இடத்தில் போதைப் பழக்கம் உள்ளது. உணவுப் பழக்கத்தால் உடல் பருமனுக்கு இரண்டாவது இடம். உடல் பருமன் நோய் இல்லை என்றாலும் கூட, உடல் நலத்தைச் சிதைக்கும் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவற்றுக்குக் காரணியாக உடல் பருமன் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது நூல்.
உடல் எடை அதிகரிப்பால் வரும் நோய்கள், உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் எடை குறைப்பு, எடை குறைக்கும் பயிற்சிகள், மருந்தியல் சிகிச்சை, எடை குறைக்கும் எளிய சிகிச்சைகள், குறை தீர்க்கும் அறுவைச் சிகிச்சைகள், உடல் பருமன் வராமல் தடுக்கும் உணவுப் பொருள்கள், உடல் எடையைக் குறைக்குமா பேலியோ டயட் எனப் பல்வேறு தலைப்புகளில் உடல் பருமன் பிரச்னையை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
உடல் பருமன் பிரச்னையில் அக்கறை கொண்டு உடல் நலனைப் பராமரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்த நூல்.
நன்றி: தினமணி, 25/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818