ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக்.180, விலை ரூ.100.
தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இரவு 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு தூங்கும் நகரமாகிவிட்டது; ஆனால் தூங்கா நகரமாக இருந்தபோது இரவு நேரத்தில் சாப்பிட என்னென்ன கிடைத்தன?
நல்ல ருசியான முறுக்குக் கடைகள் எங்கிருந்தன? சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள முக்கியமான சாலைகளான மாரட் வீதிகளுக்குஅப்பெயர் எப்படி வந்தது? மதுரையில் உள்ள காக்கா தோப்பு, வில்லாபுரம், மதிச்சியம், சொக்கிகுளம் ஆகியவற்றுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? மதுரையை ஆண்ட மன்னர்கள் யார்? மதுரைப் பகுதியில் விளையாடிய விளையாட்டுகள் எவை? மதுரைக்கேயுரிய சிறப்பான நேவி பேனா கடை எங்கு இருந்தது? டவுன் ஹால் ரோடு என்ற பெயர் ஏன் வந்தது?
மதுரையில் அதிகம் ஓடிய குதிரை வண்டிகள், ரிக்ஷாக்கள், பழமையான திரையரங்குகள், மதுரைக்கேயுரிய மல்லி, சுங்கடிச்சேலை, ஜெய்ஹிந்த் பகுதியில் ஸ்டவ் தயாரிக்கும் தொழில் அதிகம் இருந்தது என மதுரை தொடர்பான ஏகப்பட்ட விஷயங்களை இந்நூல் தொகுத்துக் கொடுக்கிறது.
மதுரையில் உள்ள பஞ்சாலைகள், கோயில்கள், குளங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் மதுரை எந்த அளவுக்குப் பங்கேற்றது? மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் யார்? சாதி ஒழிப்புப் போரில் மதுரையின் பங்கு என்ன? என்பன போன்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பல அரிய தகவல்களைக் கூறும் இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளை அவற்றின் பொருள் அடிப்படையிலேயோ, கால வரிசைப்படியோ பிரித்து தனித்தனியாக அடுத்தப் பதிப்பில் தொகுத்துக் கொடுத்தால் நூலை வாசிப்பவர்கள் எளிதாக குறிப்பிட்ட ஒன்றைத் தேடி தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி: தினமணி, 25/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818