நேரா யோசி!
நேரா யோசி!, சுதாகர் கஸ்தூரி, பினாக்கிள் புக்ஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், பக்.144, விலை ரூ.150.
மாத்தி யோசி என்ற சிந்தனை இன்றைய சமூகத்தில் எப்படி பலரின் பார்வையில் வக்கிரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நியாயமாக அங்கலாய்க்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறும் செய்தி – மாத்தி யோசி என்பதற்கு முன்பாக, நேரா யோசிப்பது எப்படி என்று அறிந்து கொள் என்பதுதான். அந்தச் சிந்தனையைத் தூண்டும் 24 அருமையான கட்டுரைகளை – இல்லையில்லை – பார்வைகளை நமக்குத் தருகிறார்!
நேராக யோசிப்பதற்கும் ஒன்றின்மேல் எண்ணத்தைக் குவித்து சிந்திப்பதற்கும் வேறுபாடு உண்டு, அனைவராலும் சிதறியோடும் சிந்தனைகளைச் செய்ய முடியும் – வெற்றிக்குத் தெளிவான, செறிவான சிந்தனைக்கு உணர்வும் பயிற்சியும் தேவை என்ற கோட்பாட்டைக் கூறி மணிமணியான யோசனைகளைத் தருகிறார்.
சுயநம்பிக்கையைத் தூண்டுவதற்கு வழக்கமாகக் கூறும் அறிவுரைகளைப் புறந்தள்ளுகிறார் நூலாசிரியர். உள்நோக்கிப் பார்க்கும் பார்வையை ஊக்குவிக்கிறார். பெற்றோர்-பிள்ளைகள், அதிகாரி-பணியாளர் போன்ற உறவுகளில் ஆதிக்க அணுகுமுறைகள் ஏற்படுத்தும் இடர்களை நயமாகச் சொல்கிறார். புகார் கூறுதல், முன் அனுபவம், சுய இரக்கம் போன்றவற்றை எதிரிகள் என்று குறிப்பிடும் தலைப்புகளில் நமது சிந்தனைக் கண்ணோட்டத்தின் திசையை மாற்றுகிறார்.
நம் உழைப்பை அங்கீகரிக்காத அலுவலகம் அல்லது கல்வி அமைப்பு பற்றிப் புகார் கூறுவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அது சரிதானா? நம் திறமையைக் குறித்த சுய உறுதி அவசியம்தான்; ஆனால் சரியான காரணங்கள் இல்லாத தற்புகழ்ச்சி உதவாது என்று புகார் என்னும் எதிரி' கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இந்தப் புத்தகம், இளையவர்களுக்கும் பெரியவர்களுக்குமானது. இதில் உபதேசம் இல்லை. வெறும் சுட்டிக்காட்டல்தான். வழக்கமான ஊக்க சிந்தனைப் புத்தகங்களில் உள்ள வழக்கமான சொற்களையும் சொல் தொடர்களையும் அவர் தவிர்த்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் சரி.
மாத்தி யோசிப்பதற்கு முன்பு, நேரா யோசிக்கச் சொல்லும் இந்தப் புத்தகம் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிறது!
நன்றி: தினமணி, 14/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818