நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல்
நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் – நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; முல்லை பதிப்பகம்,பக்.168; ரூ.150;
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர் நூலாசிரியர். அவர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல் மதிப்புரைகள், கட்டுரைகள், இலங்கை நாளிதழான வீரகேசரிக்கு அளித்த நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
நூலாசிரியரின் சீரிய கருத்துகள் இந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும், தற்கொலை முயற்சியைக் குற்றமற்றதாகக் கருதலாமா?
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007 கூறுவது என்ன? பெண்களுக்கான சட்ட உரிமைகள் எவை? என்று நீதி, சட்டம் தொடர்பான பல கட்டுரைகளும், உரைகளும் ஒருபுறம் என்றால், திருவாசக ஆய்வுக்களஞ்சியம் நூலை வெளியிட்டு வழங்கிய வாழ்த்துரை, மூவர் தேவார தமிழிசை விழாவில் ஆற்றிய உரை, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரை என தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் இன்னொருபுறம் நம்மை வியக்க வைக்கின்றன.
அண்ணாதுரை, கருணாநிதி, நீதிக்கட்சி, திராவிட இயக்கம் தொடர்பான நூலாசிரியரின் கருத்துகள் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும் உள்ளன. நூலாசிரியரின் பல்துறை சார்ந்த ஈடுபாடும், தெளிவும் வியக்க வைக்கிறது.
எந்தவொரு கருத்தை எடுத்துக் கொண்டாலும் அதை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து நடைமுறை சாத்தியமான தீர்வுகளை நூலாசிரியர் வழங்கியிருப்பது சிறப்பு.
நன்றி: 27/5/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818