நின்று ஒளிரும் சுடர்கள்
நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 130ரூ.
“தமிழ்த் திரையுலகில் நின்று ஒளிவீசிய தனிச்சுடர் எஸ்.வி.ரங்காராவ்; “ஏழை படும் பாடு‘’ படத்தில் கதாநாயகனாக, “கப்பலோட்டிய தமிழன்’‘ படத்தில் சிவாஜியின் தந்தையாக, மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்த சித்தூர் வி.நாகையா; நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என எல்லா வேடத்திலும் புத்தொளி பாய்ச்சிய டி.எஸ்.பாலையா; 18வயதிலேயே 60வயது முதியவராக நடித்துப் புகழ்பெற்ற வி.கே.ராமசாமி; பாரதியார் வேடத்தில் நடித்த எஸ்.வி.சுப்பையா; வாய்ஸ் மாடுலேஷனில் வாத்தியாராகத் திகழ்ந்த எம்.ஆர்.ராதா; இயல்பான நடிப்பில் பெயர் பெற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன்; மலைக்கள்ளன், நிச்சய தாம்பூலம் போன்ற பல படங்களில் நடித்த டி.எஸ்.துரைராஜ்; தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒத்து ஊதுபவராக நடித்த நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி; இவர்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை உடையவர்கள்.
இவர்களுடன் சிவாஜியை இணைப்பதா என்று எவரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, “நடிப்பு உலகிற்குள் நுழையும்போதே பல்கலைக்கழகமாக நுழைந்தவர் சிவாஜி’‘ என்ற நெல்லை கண்ணனின் கருத்தைப் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்க சமயோசிதம். வைரம் பாய்ந்த நடிப்பு அனுபவசாலிகள் பத்துபேரைத் தேர்வு செய்து, அவர்கள் வெள்ளித்திரையில் அழியாத தடம் பதித்த காட்சிகளைத் தொகுத்தளித்திருக்கும் பாங்கு வரவேற்புக்குரியது.
நன்றி: தினமணி,6/2/2017.