நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், டாக்டர் J.V.G. சேகர், நர்மதா பதிப்பகம், பக். 368, விலை 200ரூ.
வக்கீல் தொழில் புரிந்த இந்நூலாசிரியர், அதை விட்டு விட்டு இயற்கை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, 30 ஆண்டுகளாக அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து பாராட்டு பெற்று வருகிறார். இதில் இவரது மனைவி டாக்டர் மதுரம் சேகரும் யோகா, யுனானி, மற்றும் அக்கு பஞ்சர் நிபுணராக இவருக்கு துணை நிற்பது சிறப்புக்குரியது.
இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும், தங்கள் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார்கள்.
அதேபோல், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவ சங்கங்களின் கருத்தரங்களிலும் பின்விளைவோ, பக்க விளைவோ ஏற்படுத்தாத இயற்கை மருத்துவத்தைப் பற்றி சிறப்புரை ஆற்றி வருகிறார்கள். இந்நூலில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படும் பல்வேறு நோய்களைகளைப் பற்றிய விபரங்கள், அந்நோய் வரக் காரணங்கள், அவற்றை தடுக்கும் முறைகள், நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருத்துவப் பொருட்கள், அதன் மூலம் மருந்தை தயாரிக்கும் செய்முறைகள், அதைக் கையாளும் வழிமுறைகள், மருந்துகைள பயன்படுத்தி குணமடையும் வழிகள்… என்று அனைத்து விபரங்களையும் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழ்நடையில் விளக்கியுள்ளார்.
பரம்பரை நோயா கவலை வேண்டாம் என்று தொடங்கி, உடல் எடை குறைய, வலியின்றி குழந்தை பெற, அல்சர் நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மூட்டு வலி, கேன்ஸர், இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, நரம்புத் தளர்ச்சி, மஞ்சள் காமாலை, பக்கவாதம், காக்கா வலிப்பு, விஷம் சாப்பிட்டவர்கள் பிழைக்க, காது கேளாமை… இப்படி நூற்றுக்கணக்கான நோய்களுக்கு இந்நூலில் நமக்கு நாமே தீர்வு காணும் வழி முறைகளை கூறியுள்ளது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 21/9/2016.