ஒளி ஓவியம் – பாகம் 1
ஒளி ஓவியம் – பாகம் 1 சி.ஜெ.ராஜ்குமார், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.118. விலை ரூ.350.
ஒளிப்பதிவாளரான நூலாசிரியர் தனது அனுபவங்களிலிருந்தும், தொழில்நுட்ப அறிவிலிருந்தும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.
கி.மு.70,000 இல் உடைந்த பாறைகளில் இயற்கையாகக் கிடைக்கும் பாசி அல்லது விலங்குகளின் கொழுப்பை ஊற வைத்து, நெருப்பில் பற்ற வைத்து ஒளி உருவாக்கப்பட்டது எனத் தொடங்கும் ஒளியின் வரலாறு, நவீன எல்.இ.டி. விளக்குகள் வரை எழுதப்பட்டுள்ளது. ஒளியின் அளவு, தரம் ஆகியவற்றை எப்படி மதிப்பிடுவது?
ஒளியின் அடர்த்தியை அளவிடும் முறைகள் எவை? எப்படி ஒளி அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்? திரைப்பட ஒளிப்பதிவில் ஒளியின் அளவைத் தீர்மானிக்க எவ்விதம் லைட் மீட்டர்கள் பயன்படுகின்றன? ஒளிப்பதிவில் பயன்படுத்தப்படும் சாம்பல் நிற அட்டையின் பயன்கள் எவை? நிறங்களின் தன்மை, நிறச்சாயல், நிறச்செறிவு என்றால் என்ன? ஒளிப்பதிவுக்குப் பயன்படும் ஒளிவிளக்குகள் பற்றிய அறிமுகம், ஒளியைக் கட்டுப்படுத்தும்முறைகள் என ஒளிப்பதிவு சார்ந்த தொழில்நுட்பங்கள், தேவையான வண்ணப்படங்களுடன் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
பிரபல ஒளிப்பதிவாளர்கள் கையாண்ட ஒளியமைப்புமுறைகள் பற்றியும், ஒளியமைப்பு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் பற்றியும் இந்நூல் விளக்குகிறது.
திரைப்படத்துறையிலும் ஒளிப்பதிவிலும் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் நூல்.
நன்றி: தினமணி