ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும்
ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும், பேரா. சே. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், பக். 418, விலை ரூ.400.
‘ஒப்பிலக்கியம்’ என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார்.
ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் ‘ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்’ எனும் தலைப்பில் பிரெஞ்சு – அமெரிக்கக் கோட்பாடுகள்; ‘ஒப்பிலக்கியம்- வரையறை இலக்கணம்’ என்ற தலைப்பில் துறை-முறைகள்; ‘ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில், பிறப்புறவு முறை, இலக்கிய வகை, அடிக்கருத்தியல், இலக்கியமும் நுண்கலைகளும், தொன்மமும் தொன்மத் தோற்றச் சூழல்களும் ஆகியவை சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியில், சங்கக்கால முருகனுக்கும் கிரேக்க டயோனிசுக்கும் உள்ள தொன்ம உருவாக்கம்; இணைவரை ஆய்வு என்ற தலைப்பில் குடும்பமும் – திருவள்ளுவரும் அரிஸ்டாட்டிலும்; அடிக்கருத்தியல் எனும் தலைப்பில் வள்ளத்தோளும் – தொன்மப் பாத்திரச் சீதையும் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.
மேலும், மானிடவியல் நோக்கில் ஆவிக் கோட்பாடும் – கடவுள் பற்றிய கருத்தாக்கமும்; உளவியல் நோக்கில் ஓரம்போகியாரின் ஆளுமைத்திறன், தெ.பொ.மீ.யின் கானல்வரி, ஐங்குறுநூற்றில் தாயும் சேயும் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளுடன் பிறதுறை ஒப்பீடுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
நன்றி: தினமணி, 2/5/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033291_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818