ஓரெழுத்தில் ஆழ்வார்கள்
ஓரெழுத்தில் ஆழ்வார்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், பக்.160, விலை ரூ.300.
விதியை வென்று, முக்தியைஅடைய வழிகாட்டும் பன்னிரு ஆழ்வார்களின் பக்தி வரலாற்றை “ஓரெழுத்தில் ஆழ்வார்கள்’ என்ற நூல் வாயிலாக புதுக்காவியமாக செதுக்கி சிறப்பித்துள்ளார் நூலாசிரியர்.
சம்பவங்கள் விடுபடாமல், சமய நெறி குறைபடாமல், மொழியழகுடன் பிழையின்றி வைணவ வளம் காக்க ஆசிரியர் முயன்றுள்ளது மெச்சத் தகுந்தது. பன்னிருவர் வாழ்க்கையை ஓவியமாய், காவியமாய் பாடியுள்ளார்.
ஒவ்வோர் ஆழ்வாரின் பிறந்த மாதம், நட்சத்திரம், பிறந்த ஊர் – பெருமாளின் திருநாமம், திருமகளின் திருநாமம், தற்கால ஊரின் பெயர், தொடர்புக்கான முகவரி, தொலைபேசி எண், வழித்தடம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். பக்தர்கள் பகவானை சேவிக்க இது உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பொய்கையாழ்வார், மதுரகவியாழ்வார் நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், சூடிக் கொடுத்த ஆண்டாள் நாச்சியார் ஆகியோரைக் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
பன்னிரு ஆழ்வார்களின் பிறப்பு, வளர்ந்த கதை உள்ளிட்ட அனைத்தையும் படிக்க , படிக்க மெய் சிலிர்க்கிறது.
“மனிதப் பிறவியும் இறைவனோடு நேரடியாகக் கலக்கலாம் என்பதற்கான ஆதாரம்தான் ஆண்டாளின் சரிதமென்றால் அது பொய்யாகுமோ’ என்று கூறி படிப்போரை சிந்திக்கத் தூண்டியுள்ளார் ஆசிரியர்.
நன்றி:தினமணி, 14/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818