பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு – மு.நீலகண்டன்; கனிஷ்கா புத்தக இல்லம்,  பக்.202. விலை ரூ.180.

தொன்மைக்கால பாண்டிய மண்டலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது. கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் பெளத்தம் பாண்டிய மண்டலத்துக்கு வந்திருக்கலாம் என்று கூறும் நூலாசிரியர், பாண்டிய மண்டலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்த சமயமும், சமண சமயமும் உயர்ந்தநிலையில் இருந்திருக்கின்றன; நாட்டின் பல பகுதிகளில் பெளத்த விகாரங்கள் அமைக்கப்பட்டன; புத்த பள்ளிகள் இருந்தன என்கிறார். அதற்கான பல வரலாற்று ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

அரிட்டாபட்டி, அழகர்மலை, கொங்கர் புளியங்குளம், கீழை வளவு, சித்தர் மலை, ஆனை மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படுகிற குகைகளைப் பற்றியும், அங்கு காணப்படுகிற பெளத்தம் தொடர்பான பிராமி எழுத்துகள் பற்றியும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. மதுரை அருகே உள்ள அழகர்கோயில் பகுதியில் பெளத்த சின்னங்கள் இருந்திருக்கின்றன என்று கூறும் நூலாசிரியர், மதுரை அருகே உள்ள பாண்டி முனிஸ்வரர் கோயில் ஒரு காலத்தில் புத்தர் கோயிலாக இருந்திருக்கக் கூடும் என்ற தொல்லியல்துறையின் கருத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

களப்பிரர் காலத்தில் பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் அரசு சமயமாக்கப்பட்டது. புத்ததுறவிகள் தமிழ்நாடெங்கும் சமயப் பிரசாரம் செய்தார்கள். பின்னாளில் களப்பிரர் சமண சமயத்துக்கு மாறியதால், பெளத்த சமயம் இறங்கு முகம் கண்டது என்கிறார் நூலாசிரியர்.

பாண்டிய மண்டலத்தில் இருந்த பெளத்த சமயத்தின் தடயங்களை இந்நூல் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது.

நன்றி: தினமணி, 29/3/2021.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.