உப்புச்சுமை
உப்புச்சுமை, ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160.
கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல்.
நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை, திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒத்துக் கொள்ளச் சொன்ன காவல்துறையினரிடம் அடிவாங்கி திருந்திய மனிதனாக மாறியதைச் சித்திரிக்கும் பிழைத்திருத்தம், முதியோர் இல்லங்களில் மனவேதனையில் மூழ்கிக் கிடப்பவர்களை அதிலிருந்து மீள வழி சொல்லும் உப்புச்சுமை சுமைதூக்கியாக வேலை செய்யும் கணவன், வெங்காய மண்டியில் வேலை செய்யும் மனைவி ஆகிய இருவருக்கும் இடையிலான இல்லற வாழ்க்கையைச் சித்திரிக்கும் தெனக்கூலி, மழை அதிகமாகப் பெய்தும், மழை பெய்யாமலும் நலிந்து போன விவசாயத்தைத் தொடர முடியாமல் மருத்துவக் கல்லூரி கட்ட நிலத்தை விற்க நினைக்கும் மகன், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரைவிடும் தாயின் கதையைச் சொல்லும் கடைசி கட்டம் உள்பட அனைத்துச் சிறுகதைகளுமே இன்றைய வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை உணர்வுப்பூர்வமாகச் சித்திரிப்பவை.
ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றிச் சுழலும் சம்பவங்களின் நேர்த்தியான தொகுப்பாக கட்டமைக்கப்பட்டு இருக்கிற இந்தச் சிறுகதைகள், நம் உணர்வுகளில் கலக்கும் கலைத்தன்மையோடு எழுதப்பட்டிருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 29/3/2021.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818