பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை ரூ.160.

புறநானூறு தொடர்பான நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள கட்டுரைகள் பன்முக நோக்கு, வாழ்க்கை வெளிச்சங்கள், சான்றோர் அலைவரிசை, கண்ணீர் ஓவியங்கள், உரை வளமும் பா நலமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டிருக்கின்றன.

புலவர் பொன்முடியார் பாடிய ஒரு பாடலுக்கு, அற்புதமான விளக்கம் கூறுவதுடன் பொன்முடியார் கூறாத ஒரு கருத்தையும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலுக்கு சூஃபி கதையும், கவிஞர் கண்ணதாசனின் வரிகளையும் மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.

நீரின் இன்றியமையாமை, நீர் நிலைகளை உருவாக்குவதால் வரும் நன்மைகளை மன்னனுக்கு அறிவுறுத்தும் புலவர் குடபுலவியனாரின் பாடலுக்கு இங்கிலாந்து நாட்டின் பொறியாளரான ஜான் பென்னிகுக் என்பவரின் செயலை இணைத்துக் காட்டி இருப்பதும்;

லையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சூளுரையும்; ஒவையாரின் புறப்பாடலுக்கான (367) நுட்பமான விளக்கமும்; இளமை குன்றாமல் இருப்பதற்குப் புலவர் பிசிராந்தையார் கூறும் வழிமுறையை, இரா. இளங்குமரனாரின் கருத்தோடு ஒப்பிட்டுக் கூறியிருப்பதும்; தொடித்தலை விழுத்தண்டியனாரின் பாடலுக்கு சீன மொழிக் கதையோடு தொடர்புபடுத்தியும், கவிக்கோ அப்துல் ரகுமானுடைய கவிதை ஒன்றோடு ஒப்புமைப்படுத்தியும் – என இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் தலைப்புக்கு ஏற்றவாறு பன்முகத்தன்மை கொண்டவையாக இருப்பதுடன், அரிய பல தகவல்களையும் வழங்கியுள்ளது.

நன்றி: தினமணி, 13/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *