பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு
பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு, மருத்துவர் ச.இராமதாசு, வழுதி வெளியீட்டகம், பக்.240, விலை ரூ.200.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, ‘கல்கி’வார இதழில் தொடராக எழுதியவற்றின் நூல் வடிவம் இது.
திண்டிவனத்துக்கு அருகில் உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆதி திராவிடர் காலனியில் இருந்த பள்ளியில் படித்தது, ஆறாம் வகுப்பில் இருந்து சென்னையில் உள்ள அக்கா வீட்டில் தங்கிப் படித்தது, ஒரு செட் உடையைத் தினமும் துவைத்துப் போட்டு அணிந்தது, தினமும் 6 கி.மீ. நடந்து பள்ளிக்குச் சென்றது, மருத்துவக் கல்லூரியில் படித்தபோது விடுதிக்குப் பணம் கட்ட முடியாமல் தவித்தது என வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த நிகழ்வுகள் கண்களில் நீரை வரவழைக்கின்றன.
இருந்தும் இளமையில் இருந்தே கடினமான முயற்சி செய்யும் அவரின் இயல்பு, துன்பத்தைக் கண்டு சோர்ந்துவிடாத தன்மை நம்மை வியக்க வைக்கிறது. மருத்துவப் படிப்பு முடித்து பணி செய்தது, அதன் பின் வறுமை அகன்றது, இளமைக்காலத்தில் தனக்கு உதவி செய்த அக்காவின் குடும்பத்தை இவர் பார்த்துக் கொண்டது என ஒரு நல்ல மனிதரின் வெற்றிக் கதை நம் கண்முன் விரிகிறது.
1980 இல் சிதறிக் கிடந்த பல வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தைத் தொடங்கியது, அதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் ஊர் ஊராகச் சென்றது, ஒவ்வொரு சாதிக்கும் அவரவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் நடத்தியது, சிறை சென்றது, இந்தப் போராட்டங்களை கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய முதலமைச்சர்கள் எதிர்கொண்ட விதம், காவல்துறையின் கொடூரமான தாக்குதல்கள், 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தது, மதுவிலக்கு, ஈழத்தமிழர் பிரச்னை, மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கிய விவகாரம், காவிரி பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்காக இன்றுவரை போராடிக் கொண்டிருப்பது என நூல் விரிகிறது.
விடாமுயற்சி, வெற்றி, கொள்கைப் பிடிப்பு, சார்ந்த லட்சியத்துக்காகப் போராடுதல் போன்ற உயர்ந்த எண்ணங்களை வாசிப்பவர் உள்ளத்தில் உருவாக்கும் சிறந்த நூல் இது.
நன்றி: தினமணி, 13/11/2017.