இந்திய சீனப் போர்
இந்திய சீனப் போர், நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.416, விலை ரூ.350.
1962 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக போர் நடந்தது. போருக்கு முன்பும், போரின்போதும், அதற்குப் பிறகும் நடந்தவை பற்றி, தான் செய்தியாளராக வேலை செய்த ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு நிறைய எழுதி அனுப்பினார் நூலாசிரியர்.
போர் முடிந்த பிறகு, இந்திய – சீன அரசுகளிடம் இருந்து கிடைத்த, திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், இருநாடுகளின் பிரமுகர்களிடம் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலும் இந்நூலை எழுதியிருக்கிறார்.
இந்திய – சீன எல்லைப் பிரச்னையின் வரலாறு, இந்திய – சீனப் போரில் இந்தியா தோல்வியைத் தழுவியது, அதற்கான காரணங்கள், இந்தியா சரியான ராணுவத் தயாரிப்புகள் இல்லாமல் போரில் ஈடுபட்டது, போர்க்கால நிகழ்வுகள் என அனைத்தையும் சிறப்பாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது.
போருக்குப் பிந்தைய காலத்தில் நேருவின் அணிசேராக் கொள்கையில் தளர்வு ஏற்பட்டது, அவர் அமெரிக்கச் சார்பு நிலை எடுத்தது, சீனாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்தது, போரின் தோல்விக்கான காரணங்களாக இந்திய அரசு சொன்னதை மக்கள் ஏற்றுக் கொண்டது, இந்தியாவின் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போரின் காரணமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளால் பிளவுபட்டது என போரினால் ஏற்பட்ட பல நிகழ்வுகளையும் இந்நூல் விளக்குகிறது.
55 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் அரசியல், பொருளாதார, ராணுவ, வெளியுறவுக் கொள்கைகள் எப்படி இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
நன்றி: தினமணி, 13/11/2017.