பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும்
பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும், மறைஞானசம்பந்தர், உரையாசிரியர் மறைஞானதேசிகர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 150, விலை ரூ. 135.
சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பதுபோலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். இவர்களுள் அருணந்தி சிவத்தின் மாணாக்கரான மறைஞானசம்பந்தர் எழுதியது இந்நூல். சைவ சித்தாந்தத்தின் நுண்கருத்துகளை விளக்கும் இந்நூலுக்கு காண்டிகை உரை வரைந்திருப்பவர் மறைஞானதேசிகர்.
ஒவ்வொரு பாடலும் திருக்குறள் போல ஏழு சீர்களோடு ஒன்றேமுக்கால் அடியில் அமைந்திருப்பதால் இதனை குறள் வெண்பா நூல் என்றும் கூறுவர். இந்நூல் பிரமாணவியல், பதிசாதகவியல், பசுசாதகவியல், பாசசாதகவியல், பொதுவியல், போதகவியல் என ஆறு அங்கங்களோடு கூடிய 332 குறள் வெண்பாக்களையுடையது.
இந்நூலிலுள்ள பாடல்கள் சைவ சித்தாந்த கருத்துகளை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகின்றன. உதாரணமாக, நம் உடலில் ஆன்மா இருக்கிறது என்பதை விவரிக்கும் பாடலில் “புகையுள்ள இடத்து அக்கினி உண்டு என்று அனுமித்தாற்போல், இச்சரீரம் போக்குவரவு புரியக் காண்கையில் இவ்வுடலில் ஆன்மா உண்டென்று அனுமித்தறிக (கண்டுபுகை யாதி யனலா தியைக்கருதிக் கொண்டிருத்தல் முந்தியதாகும் (பிரமாணவியல் 39) என்கிறார். மேலும், நனவின் காரியம் கனவின்கண் மறந்து போவதால் மனிதர்கள் இறப்பதும் பின்வந்து பிறப்பதுவும் கனவும் நனவும் போன்றது (மறந்தாய் நனவைக் கனவின் மதிமுன் இறந்தே பிறந்தாய் இழந்து) என்றும் கூறுகிறார்.
சித்தாந்தக் கருத்துகளை எளிமையாக விளக்க முடியும் என்பதற்கு இந்நூலின் உரை ஓர் உதாரணம். பாடலுக்குப் பாடல் சைவமும் தமிழும் மணந்திடும் இந்நூல் உரையோடு வெளிவரவில்லையே என்கிற குறை இந்நூலால் தீர்ந்தது.
சைவ சமயிகளுக்கு மட்டுமல்லாது தமிழன்பர்களுக்கும் இந்நூல் ஓரு பொக்கிஷம் எனலாம்.
நன்றி: தினமணி, 18/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818